Published : 16 Mar 2023 06:49 AM
Last Updated : 16 Mar 2023 06:49 AM

மக்கள் பணிகளை மேற்கொள்ளும்போது திமுக வட்ட செயலாளர்களால் இடையூறு: காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார்

சென்னையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம்.

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு, திமுக வட்ட செயலாளர்கள் சிலர் இடையூறாக அளிப்பதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக முதல்வரை சந்தித்து புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில், தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசினர்.

தங்களை மாநகராட்சி அதிகாரிகள் மதிப்பதில்லை என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும், தங்கள் பகுதியில் மக்கள் பணிகளை மேற்கொள்ளும்போது, அப்பகுதி திமுக வட்டச் செயலாளர்கள் இடையூறு செய்வதாகவும், தொல்லை கொடுப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மூலமாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புகார் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜுன கார்கே, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ரிப்பன் மாளிகை வளாகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு அறை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x