Published : 15 Mar 2023 06:07 PM
Last Updated : 15 Mar 2023 06:07 PM

ஓட்டுநர் இல்லை, 90 வினாடிக்கு ஒரு ரயில்: ரூ.1,620 கோடியில் சென்னை மெட்ரோ மிகப் பெரிய திட்டம்!

சென்னை மெட்ரோ ரயில் | கோப்புப் படம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 90 வினாடிக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கும் வகையில் ரூ.1,620 கோடியில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2-ம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அதிநவீன தொழில்நுட்பங்களை ரூ.1,620 கோடி செலவில் வாங்க ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் ஏஸ்பிடி மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயில் ரூ.1,620 மதிப்பில் சமிக்ஞை ரயில் இயக்க கட்டுப்பாடு, காணொலி மேலாண்மை அமைப்பினை வடிவமைத்து உற்பத்தி செய்து, நிறுவி, சோதனை செய்யும் பணிகளுக்கு ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் ஏஸ்பிடி மற்றும் ஹிட்டாச்சி ரயில் எஸ்டிஎஸ் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் தொலை தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு மூலம், ஓட்டுநர் தேவை இன்றி ரயிலை இயக்க முடியும். இந்த அமைப்பு பன்னாட்டு தரங்களின் அடிப்படையில் அமையும். இந்த அமைப்பு குறைந்தபட்சம் 90 வினாடி இடைவெளியில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.

118.9 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டத்தில் 2 பனிமனைகள், 113 மெட்ரோ ரயில் நிலையங்கள், 138 ரயில்கள் மற்றும் 3 பராமரிப்பு ரயில்களுக்கான சிக்னலிங், ரயில் கட்டுப்பாடு, வீடியோ மேலாண்மை அமைப்பு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்தப் பணிகளை 2027-ம் ஆண்டு இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப் பெரிய மெட்ரோ சிக்னலிங் தொகுப்பு ஆகும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x