Published : 15 Mar 2023 05:51 PM
Last Updated : 15 Mar 2023 05:51 PM

“எங்களுக்கெல்லாம் தலைமைப் பீடம் தஞ்சாவூர்தான்” - அமைச்சர் கே.என்.நேரு பகிர்ந்த தகவல்

நிகழ்வில் அமைச்சர்கள் கே. என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தஞ்சாவூர்: “தஞ்சாவூரிலுள்ளவர்கள் மீது கருணாநிதியின் கடைக்கண் பார்க்கவில்லை என்றால் இன்று மேடையில் இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளில் இருந்திருக்க முடியாது” என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, ஜல் ஜீவன் திட்டத்தின் பங்களிப்புடன் பூதர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களுக்கான கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுக் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு வைத்து பேசியது: ”தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும், திருவையாறு ஒன்றியத்தில் 15 கிராமங்களிலும், தஞ்சாவூர் ஒன்றியத்தில் 55 கிராமங்களிலுள்ள உள்ள மக்களுக்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம் சுமார் 16.78 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க கணக்கிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக ரூ. 248.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக திருச்சென்னம்பூண்டி, தோகூர் ஆகிய 2 பகுதிகளில் கிணறு அமைக்கப்படவுள்ளது.

இதேபோல் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் நூலகத்திற்கும், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களில் புதியதாகப் பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருவையாற்றில் பெரிய அளவிலான மார்க்கெட் அமைப்பதற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிக்கு தேவையான அனைத்தும் அடிப்படை வசதிகளையும் முதல்வரின் அனுமதி பெற்றுச் செய்து கொடுக்கப்படும்.

எங்களுக்கெல்லாம் தலைமைப் பீடம் தஞ்சாவூர்தான். தஞ்சாவூரிலுள்ளவர்கள் மீது கருணாநிதியின் கடைக்கண் பார்க்கவில்லை என்றால், இன்று மேடையில் இருப்பவர்களில் ஒருவர் கூட பெரிய பொறுப்புகளில் இருந்திருக்க முடியாது. இந்த மாவட்ட மக்கள்தான் எங்களுக்கு தலைமை தாங்குகின்ற மக்கள். உங்களுக்கு சேவை செய்வது எங்களின் தலையாய கடமையாகும்.

தமிழகத்திற்கு நிதி ஒதுக்கினால், அதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் சேர்த்திட வேண்டும். மற்ற மாவட்டங்களில் பல்வேறு தொழில்கள் உள்ளன. ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் தான் தமிழகத்திற்கு உணவளிக்கின்ற ஒரே மாவட்டமாகும். அதனால்தான் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு என்ன நிதி கேட்டாலும் உடனே முதல்வர் வழங்குவார். இந்த துறைக்குக் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 11,401 கோடியாகும். தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாத காலத்தில் ரூ. 38,803 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றி வருகிறார். இதேபோல் திருவையாற்றை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள். அதனையும் முதல்வரின் அனுமதியைப் பெற்று முதலாவதாக அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும், இந்த துறை சார்பில் கோயம்புத்தூரில் 178 எம்எல்டி (1 எம்எல்டி என்பது 10 லட்சம் லிட்டர் தண்ணீர்) தண்ணீர் இன்னும் 1 மாத காலத்தில் வழங்கவுள்ளோம். இதே போல் சேலத்தில் 54 எம்எல்டி தண்ணீரும், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில், சங்கரன்கோயில், புளியங்குடி உள்ளிட்ட அனைத்தும் பகுதிகளிலும் இப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

நிகழ்வு முடிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் எஸ். எழிலரசன் நன்றி கூறினார். இந்நிகழ்வை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.கருணாகரன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் என்.முரளி திட்ட விளக்கவுரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x