Published : 15 Mar 2023 06:02 AM
Last Updated : 15 Mar 2023 06:02 AM

கடந்த கால ஆட்சியில் எதையும் செய்ய முடியாத நிலையில் நிர்வாக ரீதியிலும், வளர்ச்சியிலும் சீர்கெட்டுள்ளது: முதல்வர் ரங்கசாமி வருத்தம்

புதுச்சேரி: கடந்த கால ஆட்சியில் எதையும் செய்ய முடியாத நிலையில் புதுச்சேரி மாநிலம் நிர்வாக ரீதியிலும், வளர்ச்சியிலும் மிகவும் சீர்கெட்டுள்ளது. அதனை மாற்றிகொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது: ஆளுநர் தமிழில் உரையாற்றுவது, இப்போது நம்முடைய புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

‘ஜி 20 மாநாடு வழக்கமாக நடைபெறும் ஒன்று; இதனால் நமக்கு என்ன பயன்?’ என்று எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஜி 20 மாநாடு இந்தியாவில் நடப்பது பெருமை சேர்க்கும் ஒன்று. குறிப்பாக பிரதமர், புதுச்சேரி யில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இதன் தொடக்க நிலை மாநாடு இங்கே நடந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பல நாடுகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் புதுச்சேரிக்கு வந்து ஆலோசனை செய்து, தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். புதுச்சேரியின் கலாச்சாரத்தை பல நாட்டினரும் அறிந்து கொண்டனர். இதற்காக பிரதமருக்கு நன்றி கூறுகிறேன்.

கடந்த கால ஆட்சியில் எதையும் செய்ய முடியாத நிலையில் புதுச்சேரி மாநிலம் நிர்வாக ரீதியிலும், வளர்ச்சியிலும் மிகவும் சீர்கெட்டுள்ளது என்பது தான் உண்மை. அதனை மாற்றி கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

புதுச்சேரியில் வளர்ச்சியை கொண்டு வந்து, பல திட்டங்களை கொண்டுவந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு மற்றும் புதுச்சேரி ஆளுநரின் உதவியோடு வளர்ச்சியை நோக்கி செல்கிறோம்.

தனியார்வசமாகும் கூட்டுறவு ஆலைகள்: பஞ்சாலை, கூட்டுறவு நூற்பாலைகளை நடத்தும் நிலையில் நாம் இருக்கிறோமா? அவற்றை எப்படி நடத்த முடியும்? அவற்றில் இருக்கின்ற தொழிலாளர்களை வைத்து நடத்த முடியுமா? என நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

மேலும் 23 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உதவித் தொகை: புதுச்சேரியில் அரசின் எந்த திட்டத்தின் கீழும் உதவிகளை பெறாத, ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பேரவையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “13 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ரூ.1,000 நிதியுதவி கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் 23 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் இத்தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார். ஏப்ரல் 15-ம் தேதிக்குள் எல்டிசி, யூடிசிக்கு தேர்வு

கேள்வி நேரத்தின் போது பேசிய முதல்வர் ரங்கசாமி, “கொம்யூன் பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 70 பணியிடங்களில் 31 பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் துறையில் 1,273 பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்து வருகிறது.

அடுத்த கட்டமாக எல்டிசி, யூடிசி பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் தேர்வு நடத்தப்படும். மொத்தம் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் 6 ஆயிரம் பணியிடங்களை நேரடியாகவும், 4 ஆயிரம் பணியிடங்களை பதவி உயர்வு மூலமும் நிரப்ப உள்ளோம்” என்று தெரிவித்தார்.

அவர்களுக்கு செலவு செய்யும்நிதியை, மக்களின் வரி பணத்தில் இருந்தே கொடுக்கிறோம். எந்தஆலையும் இயக்கக் கூடியநிலையில் இல்லை. ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுத்துவிட்டு ஆலைகளை வேறு நிலையில் என்ன செய்ய முடியும் என யோசித்து செயல்படுத்தும் நிலையில் அரசு இருக்கிறது.

கூட்டுறவு சர்க்கரை ஆலையும் நலிந்து விட்ட நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கிறோம். அவர்களுக்கு ரூ. 44 கோடி கொடுத்துள்ளோம். எந்தப் பயனும் இல்லாமல் ஊதியம் கொடுக்கிறோம். கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார்எண்ணெய் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதனை தனியாருக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்பின்கோ நிறுவனத்தையும் தனியார் பங்களிப்புடன் நடத்த முடியுமா என்று பார்த்து, முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறோம்.

சேதராபட்டில் மருத்துவப் பூங்கா: தரமான கல்வியை நாம் கொடுத்து வருகிறோம். அதுபோல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டியது நம் கடமை. சேதராப்பட்டில் 750ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம்இருந்து நாம் திரும்ப பெற்றுள்ளோம். அதில் மருத்துவப் பூங்கா மற்றும் தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கூட்டுறவு நிறுவனங்களை உயர்த்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாண்லேவில் பால் தட்டுப்பாடு இல்லாமல் சீரான நிலை இருந்து கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்கள் கறவை மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை பெருக்க அரசு தேவையான உதவிகளை செய்யும்.

கறவை மாடுகளை வாங்க மானியங்கள் வழங்கப்படுகின்றன. மற்ற துறைகளிலும் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இன்னும் ஓரிரு வாரத்தில்மாணவர்களுக்கான சைக்கிள், சீருடை, லேப்டாப் கொடுக்கப்படும். சென்டாக் நிதி உதவியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 130 கி.மீ வரை சாலைகள் போடப்பட்டுள்ளன. மற்ற சாலைகளையும் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் கட்டப்பட்டு வருகிறது.மேம்பாலங்கள், தடுப்பணைகளை கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. எம்எல்ஏக்கள் மேம்பாட்டு நிதியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு 96 சதவீதம் நிதி செலவு செய்யப் பட்டுள்ளது. தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது. வறுமையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு வரும் காலங்களில் அனைத்துதுறைகளையும் மேம்படுத்தி குறைகளை போக்கி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கும். அதற்கு முன்னோட்டமாக ஆளுநர் உரை இருக்கிறது. இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x