Published : 18 Sep 2017 06:27 AM
Last Updated : 18 Sep 2017 06:27 AM

ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில் தூங்கும் நேரம் 8 மணியாக குறைப்பு: பயணிகளிடையே சச்சரவுகளை தடுக்க நடவடிக்கை

ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் பயணிகளுக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளைத் தடுக்க இனி இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்த பயணிகள் இரவு 9 முதல் காலை 6 மணி வரை தூங்கலாம் என்று விதிமுறை இருந்தது. அதாவது 9 மணி நேரம் தூங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்கலாம் என 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

கீழ் படுக்கை வசதி, நடுவரிசை படுக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த 2 படுக்கைகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக நேரம் தூங்கிவிட்டால், விழித்திருக்கும் மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறு ஏற்படும். இதனால், தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து ரயில்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கூடுதல் நேரம் தூங்கினால் அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இந்த அறிவிப்பு பயணிகளுக்கு இடையே ஏற்படும் வீண் சச்சரவுகளுக்கு முடிவுகட்ட உதவும். குறிப்பாக, நீண்ட தூரத்துக்கு செல்லும் விரைவு ரயில்களில் கீழ்படுக்கை, நடுவரிசை படுக்கை, பக்கவாட்டில் உள்ள கீழ் படுக்கையில் முன்பதிவு செய்திருப்பவர்களில் சிலர் பகல் நேரத்திலும் தூங்குகின்றனர். இதனால், கீழ் படுக்கையில் பயணிகள் அமர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களிலும் சிலர் தூங்காமல் பேசிக் கொண்டிருப்பார்கள். இதனால், வீண் சச்சரவு ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x