Published : 11 Mar 2023 06:06 AM
Last Updated : 11 Mar 2023 06:06 AM

எம்எல்ஏவாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்பு: சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக விருப்பமில்லை என தகவல்

ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு வாழ்த்து தெரிவித்த சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை.படம்: பி.ஜோதி ராமலிங்கம்

சென்னை: சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராகசெல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்படுவதால், அவரே அப்பதவியில் தொடர வேண்டும்என்றும் தனக்கு அப்பதவி மேல் விருப்பமில்லை என்றும் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்ற ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் கடந்த பிப்.27-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நேற்று பகல் 12 மணிக்கு பேரவைத்தலைவர் அப்பாவு அறையில், அவரது முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில்முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரு, பொன்முடி, முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழககாங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப் பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்,மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வையாபுரி, விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: பேரவைத்லைவர், முதல்வர் ஸ்டாலின், தோழமை கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றது பெருமைதரும் விஷயம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த வெற்றி என்பது முதல்வரின் 20 மாத ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். அதுமட்டுமின்றி அமைச்சர்கள், திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி இந்தவெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்து கொள்வேன்.

ஈரோடு தொகுதி மக்களின் குறைகளை போக்குவதற்கு நான் முதலிடம் தருவேன். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்றார்.

அவர்தான் 18 எம்எல்ஏக்களுக்கும் பிரதிநிதி. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியும், கோபண்ணாவும் பங்கேற்றனர். இதுதவிர கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத தூய தொண்டர்களும் பங்கேற்றனர். இவ்வாறு ஈவிகேஎஸ் தெரிவித்தார்.

கொறடாவுக்கு அழைப்பில்லை: ‘‘எம்எல்ஏ பதவியேற்பு நிகழ்வில் கட்சி கொறடாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறதே?’’ என்று ஈவிகேஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘‘எந்த கொறடாவைக் கூறுகிறீர்கள். விஜயதரணியைக் கூறுகிறீர்களா? அவருக்கு தனியாக அழைப்பிதழ் அளித்திருக்கவேண்டும். தவறு செய்துவிட்டேன். அதற்காக அவரை சந்தித்து வருத்தம் தெரிவிப்பேன்’’ என்றார்.

‘செல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்படுகிறார்’- எம்எல்ஏவாகப் பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ்கூறும்போது, ‘‘சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு ஏற்கெனவே செல்வப்பெருந்தகை உள்ளார்.

வயதில் சிறியவராக இருந்தாலும், மதச்சார்பற்ற தன்மையிலும், சாதி மதங்களை ஒழிக்க வேண்டும் என்ற நிலையிலும் உறுதியாக இருக்கக் கூடிய இளைஞர்.

அவரது செயல்பாடுகள் இந்த 20 மாதங்களில் நல்லபடியாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அவரே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x