Published : 11 Mar 2023 04:04 AM
Last Updated : 11 Mar 2023 04:04 AM

புதிய வகை காய்ச்சல் பரவுகிறது - தமிழகத்தில் முகாம்களில் மக்களுக்கு தீவிர பரிசோதனை

சென்னை: நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகா, ஹரியாணாவில் காய்ச்சலின் தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பரவலாக கரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் தொற்றின் 3 அலைகளுக்கு பின்னர் அதன் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2தொற்று தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது.

நாடு முழுவதிலும் 90 பேருக்கு இந்த புதிய வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஆளூரை சேர்ந்த ஹிரே கவுடா (78) என்பவர் கடந்த பிப்.24-ம் தேதி இந்த புதிய வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடுமையான மூச்சுத் திணறல், நெஞ்சுவலி, இருமல் பிரச்சினைகளும் அவருக்கு இருந்துள்ளன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 1-ம் தேதி அவர் உயிரிழந்தார். அதேபோல, ஹரியாணா மாநிலத்திலும் இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, 2 மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 36 பேருக்கு கரோனா: தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முன்புவரை தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவானது. நேற்று ஆண்கள் 16, பெண்கள் 20 என மொத்தம் 36 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 10 பேர், கோவையில் 9 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, எச்3என்2, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் 200 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 1,300 இடங்களில் நேற்று காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டையில் முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, ‘‘நாடு முழுவதும் எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு (ஐசிஎம்ஆர்) அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 1,300 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மருந்து, மாத்திரைகள் போதுமான அளவுக்கு இருப்பில் உள்ளன’’ என்றார்.

சென்னை மேயர் பிரியா, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியபோது, ‘‘இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று என்பது, இருப்பதிலேயே மிகமிககுறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பருவகால தொற்று. பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. 4-5 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா, ஹரியாணாவில் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் உண்மைநிலை முழுவதுமாக தெரியவில்லை’’ என்றனர்.

பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்: தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சூழலும் இல்லை. எனவே, மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம். காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் 4 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே குணமடையலாம். கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்தால் இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது, இங்கு ஏற்கெனவே மிதமான வகையில் பாதிப்புகளை ஏற்படுத்திய ஒமைக்ரான் வகை உருமாறிய கரோனா தொற்றுதான். தொற்று அதிகரிக்கத் தொடங்கினாலும் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. தற்போது முகாம்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது மிதமான வகை வைரஸ் பாதிப்பு என்பதால் அச்சமடைய தேவை இல்லை. எனினும், முன்னெச்சரிக்கையாக, பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x