Published : 11 Mar 2023 06:39 AM
Last Updated : 11 Mar 2023 06:39 AM

மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்: போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: புதிதாக வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்க அறிவுரை வழங்குவதற்கான ஆலோசகர் பணிக்கு அண்மையில் டெண்டர் விடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அமைச்சரிடம், ஜிசிசி முறையில் பேருந்து இயக்கத்தை ரத்து செய்தல், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுதல், அரசாணை 321முதல் 328 வரை ரத்து செய்தல்,போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை, உயர்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் முன்வைத்தனர்.

அப்போது அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக வங்கியின் கருத்துருபடி, ஜிசிசி முறையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து, ஒப்பந்த அடிப்படையில் மாநகரப் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

தொழிற் சங்கத்தினரின் கோரிக்கை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,500 புதிய மின்சாரப் பேருந்துகளில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குர் அ.அன்பு ஆபிரகாம், தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி., பொருளாளர் நடராஜன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x