Last Updated : 09 Mar, 2023 06:37 AM

 

Published : 09 Mar 2023 06:37 AM
Last Updated : 09 Mar 2023 06:37 AM

கிருஷ்ணகிரி - கோலார் இடையே நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை இயக்க வேண்டும்: ஆந்திரா குப்பம், குடிப்பள்ளிக்கும் இயக்க கோரிக்கை

ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி, குப்பம் பகுதிகளுக்கு இயக்க வேப்பனப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனப்பள்ளி வழியாக கோலார் (கேஜிஎஃப்) இடையே நிறுத்தப்பட்ட இரு தமிழக அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். மேலும், ஆந்திரா குப்பம், குடி பள்ளிக்கும் புதிய பேருந்துகளை இயக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் வேப்பனப்பள்ளி உள்ளது. இதனால், வேப்பனப்பள்ளி வழியாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இரு பேருந்துகள் இயக்கம்: இதேபோல, இங்கிருந்தும் பல்வேறு பணிகளுக்காக ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குப் பொதுமக்கள் சென்று வருகின்றனர். கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனப்பள்ளி வழியாகக் கர்நாடக மாநிலம் கனுமனப்பள்ளி, தொப்பனப்பள்ளி, பங்காரு பேட்டை, காமச்சந்திரம், மாலூர், கோலார் (கேஜிஎஃப்) ஆகிய ஊர்களுக்குத் தமிழக அரசுப் பேருந்துகள் இரண்டு இயக்கப்பட்டு வந்தன.

கரோனா ஊரடங்கின்போது, இருமாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது, இவ்வழித் தடத்தில் இயக்கப்பட்ட இரு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அப்பேருந்துகள் தற்போது வரை இயக்கப்படவில்லை. இதனால், தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

100 கிராம மக்கள் பாதிப்பு: இதுதொடர்பாக வேப்பனப் பள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: கடந்த 35 ஆண்டுகளாகக் கிருஷ்ணகிரியிலிருந்து வேப்பனப் பள்ளி வழியாகக் கர்நாடக மாநிலம் கோலாருக்கு இயக்கப்பட்ட இரு அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இருமாநிலங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், ஆட்டோ, சரக்கு வாகனங் களில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் மற்றும் கூடுதல் நேரம் செலவிடும் நிலை யுள்ளது.

ஆட்டோவில் பயணம்: எனவே, இந்த வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, வேப்பனப் பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் மற்றும் குடிப்பள்ளிக்கு தமிழக அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

தற்போது இயங்கும் ஆந்திர மாநில பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால், தற்போது வரை இப்
பகுதி மக்கள் ஆட்டோவில்பயணம் செய்கின்றனர். மேலும், வேப்பனப்பள்ளியில் இருந்து நேரலகிரி வழியாகப் பேரிகைக்கு அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சாலைகள் மூடலால் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு: கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக (புறநகர்) கிளை மேலாளர் இளங்கோவிடம் கேட்டபோது, “கர்நாடக மாநிலம் கோலாரில் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டதால், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைந்து, வருவாய் குறைந்துள்ளது.

இதனால், தமிழக எல்லை வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும், வேப்பனப்பள்ளியிலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு புதிய பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அரசுக்குக் கருத்துரு அனுப்பி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x