Published : 07 Mar 2023 06:36 PM
Last Updated : 07 Mar 2023 06:36 PM

இந்திய மீனவர்கள் 16 பேரை மீட்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கோப்புப்படம்

சென்னை: கடந்த பிப்ரவரி 23ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் உள்பட16 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகையும் வெளியுறவுத் துறை மூலம் மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்: கடந்த மாதம் 23ம் தேதியன்று, ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்கும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 இந்திய மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள், கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்) 09.02.2023 அன்று பதிவு எண்.IND-TN-15-MM-3793-ல் “புனித மேரி” என்ற பெயர் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், அம்மீனவர்கள் 23.02.2023 அன்று ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (BIOT) டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டு தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இப்பகுதி மீனவர்கள், மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள நிலையில், இக்கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துமென்று தமிழக முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தினை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x