Published : 07 Mar 2023 06:00 PM
Last Updated : 07 Mar 2023 06:00 PM

தேசியக் கட்சியின் மேனேஜர் அல்ல... நான் தலைவன்” - அண்ணாமலை ஆவேசம்

அண்ணாமலை | கோப்புப்படம்

மதுரை: "பாஜக தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், தேசியக் கட்சிகளுக்கே உரிய மேனேஜர் பட்டத்தை உடைத்து, தலைவர்கள் இந்தக் கட்சியில் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தால், கட்சி தானாகவே வளரும்" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவினர் அதிமுகவில் இணைவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "15 ஆயிரம் சென்று சேர்ந்துவிட்டனர். அதனால் இந்தக் கட்சி பலவீனமடைந்துவிட்டது. தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் எப்படி இருந்தது என்றால், இந்த திராவிட கட்சிகளில் இருந்து யாராவது ஒரு நான்கு பேர் வந்து பாஜகவை காப்பாற்றி விடமாட்டார்களா என்ற எண்ணம் இருந்துவந்தது. ஆனால், இன்றைக்கு சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜகதான் கண்முன்னே தெரிகிறது.

பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இவர்கள் வந்து நம் கட்சியை காப்பாற்றிவிடமாட்டார்களா என்ற எண்ணம் பல கட்சிகளுக்கு இருக்கிறது. இவ்வாறு பிற கட்சிகளுக்கு செல்பவர்களை வரவேற்கிறேன். நல்லபடியாக செல்லுங்கள். அந்தக் கட்சியை வீழ்ச்சி அடையாமல் பார்த்துக்கொள்ளுங்கள், அந்த கட்சியை வளர்த்துவிடுங்கள்.

கட்சியில் இருந்து வெளியே யார் சென்றாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதுதான் நம் பண்பு. அதேபோல், தேசியக் கட்சி என்றால் அங்கு தலைவர்கள் இருக்கமாட்டார்கள், அங்கு மேனேஜர்கள்தான் இருப்பார்கள் என்ற பாவணை இருக்கும். அதே பிராந்திய கட்சிகள், மாநிலக் கட்சிகள், திராவிடக் கட்சிகள் என்றால் ஒரு குடும்பத்தைச் சார்ந்த தலைவர்கள் இருப்பார்கள். அசைக்கமுடியாமல் 50 ஆண்டுகள் அவர்களே இருப்பார்கள்.

அவர்களை நம்பி சென்றால், நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் குறிப்பாக தென்னிந்தியாவில் நிலவுகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகாவில் குடும்ப கட்சிகள் அதிகமாக இருப்பதால், ஒரே தலைவர் 10 முதல் 30 வருடம் வரை இருப்பார். இதனால், இதுவரை தமிழக அரசியல் களம் எப்படி இருந்தது என்றால், அந்த ஒரு தலைவரை நம்பிச் சென்றால் 30 வருடம் நாமும் அந்தக் கட்சியில் இருக்கலாம் என்று இருந்தது.

அண்ணாமலை இங்கு தோசையோ, இட்லியோ, சப்பாத்தி சுடவோ வரவில்லை. எப்போதும் என்னுடைய தலைமைப் பண்பு ஒரு மேனேஜரைப் போல இருக்காது. மேனேஜர் போல தாஜா வேலை எல்லாம் செய்யமாட்டேன். நான் தலைவன். ஒரு தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் நான் இருப்பேன். நான் எடுக்கும் சில முடிவுகள், சிலருக்கு அதிர்ச்சியளிக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சென்றுகொண்டே இருக்க வேண்டும்.

ஜெயலலிதா, கலைஞர் எடுக்காத முடிவுகளா? தமிழ்நாடு பார்க்காத ஆளுமையா? அந்த மாதிரிதான் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறனே தவிர, மேனேஜராக இருக்க விரும்பவில்லை. எனவே, கட்சி அதிர்வுகளை சந்தித்துக் கொண்டேதான் இருக்கும். கட்சியின் நன்மைக்காக ஒரு தலைவராக முடிவு எடுக்க வேண்டும் என்றால், கொஞ்சம்கூட பயமின்றி எடுப்பேன். டெல்லியில் நம்மைப் பற்றி சொல்லிவிடுவார்களா? டெல்லி நம்மைப் பற்றி இப்படி நினைத்துவிடுமோ? இதையெல்லாம் பார்த்தவன்தான் நான். எனவே இதற்கெல்லாம் கவலைப்பட போவது இல்லை.

பாஜக நிலையான இடத்தைப் பிடிக்கும்வரை இதுபோன்ற அதிர்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும். பாஜக தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், தேசிய கட்சிகளுக்கே உரிய மேனேஜர் பட்டத்தை உடைத்து, தலைவர்கள் இந்த கட்சியில் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தால், தானாகவே பாஜக வளரும். அதைத்தான் இப்போது செய்து வருகிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x