Published : 07 Mar 2023 06:38 AM
Last Updated : 07 Mar 2023 06:38 AM
சென்னை: ரயில்வே துறை கையேட்டின்படி, ரயில்களின் வேகம் குரூப்-ஏவழித்தடம், குரூப்-பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது.
குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கி.மீ. வரையும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க அனைத்து ரயில்வே மண்டலங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் முக்கியவழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, தெற்கு ரயில்வேயில் 2,485 கி.மீ. தொலைவு பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை ஆகிய 2 முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. ஆக ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. இதுதவிர, 5 வழித்தடங்களில் மணிக்கு 110 கி.மீ. வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில், தற்போது சில வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடங்களில் மணிக்கு 145 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை - கூடூர் வழித்தடத்தில்முதன்முறையாக 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை - ரேணிகுண்டா வழித்தடத்தில் மார்ச் மாத இறுதிக்குள் ரயில்களின் வேகத்தை 130 கி.மீ. ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வரும் ஜூன் மாதத்துக்குள் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்.
மேலும், விருத்தாசலம் - சேலம்,விழுப்புரம் - புதுச்சேரி உட்பட சிலவழித்தடங்களில் 110 கி.மீ.வரைஇயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி - தென்காசி, சேலம் - கரூர், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - வாஞ்சிமணியாச்சி உள்ளிட்ட 5 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT