Published : 13 Sep 2017 08:25 AM
Last Updated : 13 Sep 2017 08:25 AM

மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்காதது ஏன்? - அரசின் பொறுப்பின்மையே அனிதா மரணத்துக்கு காரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

நீட் தேர்வு தொடர்பான உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்தியிருந்தால் மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழக அரசின் பொறுப்பற்ற தனம்தான் மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணம் என கருத்து தெரிவித்துள்ளார்.

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாணவி கிருத்திகா, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தன்னை மருத்துவ கலந்தாய்வுக்கு அழைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், மாணவி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நீட் தேர்வால் தமிழக மாணவர்களும், பெற்றோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த மன அழுத்தத்தால் அவர்கள் தன்னம்பிக்கையை இழந்து தவறான முடிவுகளை எடுக்கக்கூடும். எனவே அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்களைக் கொண்டும், பிரபலங்களைக் கொண்டும் தன்னம்பிக்கையூட்டும் வகையில் தமிழக அரசு கவுன்சலிங் அளித்து அவர்களது மனச்சோர்வைப் போக்க வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, நீட் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக அமல்படுத்தியிருந்தால் மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார். இந்த விஷயத்தில் தமிழக அரசின் பொறுப்பற்ற தனம்தான் மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணம் என கூறினார்.

செப்.15-க்குள் பதில் தர உத்தரவு

மேலும் நீதிபதி, ‘‘நீட் தேர்வு மூலம் பாதிக்கப்பட்ட மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு தமிழக அரசு கவுன்சலிங் கொடுக்காதது ஏன்? நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த சிறப்பு ஆசிரியர்களை நியமிக்காதது ஏன்? இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு வரும் 15-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x