Last Updated : 05 Mar, 2023 05:57 PM

 

Published : 05 Mar 2023 05:57 PM
Last Updated : 05 Mar 2023 05:57 PM

கொலை குற்றவாளிகளை பிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போலீஸார்

குறிஞ்சிப்பாடியில் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவிய  சிசிடிவி கேமராவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஸ்டுடியோ உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய சிசிடிவி கேமராவுக்கு போலீஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவரின் மகன் சுந்தரமூர்த்தி( 38). இவர் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். கடந்த 27ம் தேதி இரவு 9 மணியளவில் சுந்தரமூர்த்தி தனது கடையை அடைத்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சுப்புராயர் நகர் கழுதை ஓடை பாலம் அருகே சென்றபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.

படுகாயம் அடைந்த சுந்தரமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சுந்தரமூர்த்தியின் மனைவி சசிகலாவதி குறிஞ்சிப்பாடி போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். கொலையில் துப்பு கிடைக்காமல் போலீஸார் கடந்த 5 நாட்களாக திணறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா மூலமாகவே கொலை செய்த கூலிப்படையை குறிஞ்சிப்பாடி போலீஸார் சனிக்கிழமை (மார்ச்.4) கைது செய்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) சிசிடிவி கேமராவுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்துசப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா கூறுகையில், "பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இதை நான் செய்கிறேன். அனைவரும் அவர்களது வீட்டு வாயிலில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும். இதன் மூலம் குற்ற சம்பங்களை தடுக்க முடியும், குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x