Published : 02 Mar 2023 09:49 AM
Last Updated : 02 Mar 2023 09:49 AM

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார்: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. திமுக 5 ஆண்டுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஏறக்குறைய 80 சதவீத வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

குடிநீர் வழங்கும் பணி, கழிவுநீர் அகற்றும் பணி, தடைபடாத மின்விநியோகம் ஆகியவை சிறப்பாக நடக்கின்றன. எனவே மக்கள் எங்களுக்கு தான் வாக்காளிப்பார்கள். நாங்கள் கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எதிர்க்கும் அதிமுக சஞ்சலத்தில் இருக்கிறார்கள். அவர்களால் அவர்களது அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. சஞ்சலத்தில் இருக்கிற, தன்னம்பிக்கை இல்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் மகத்தான வெற்றி பெறும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகக் கூடாது; காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது; தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது சந்தர்ப்பவாதத்தை உருவாக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருப்பது கல்லில் பதிக்க வேண்டிய முத்தான கருத்துக்கள். இதனை அவர் ஒரு அறைகூவலாக; பிரகடனமாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த கருத்து இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை காங்கிரஸ் மேற்கொள்ளும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருவது வழக்கம். ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. ஆனால், எதற்கு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்படுகின்றன என்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அவரது பொருளாதார அணுகுமுறை என்ன, அவருக்கு இருக்கும் பொருளாதார உதவியாளர்கள் என்ன பாடம் எடுக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. எனவே, பிரதமர்தான் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x