Published : 01 Mar 2023 10:02 PM
Last Updated : 01 Mar 2023 10:02 PM

“பாஜகவின் திட்டங்களை அறிந்து ‘கொள்கை யுத்தம்’ நடத்துகிறது திமுக” - பிறந்தநாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னையில் நடந்த தனது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: "பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களைப் புரிந்துகொண்டு கொள்கை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம். அந்தக் களத்திற்குப் போவதற்கு போர் வியூகங்களை வகுக்கக்கூடிய பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது எனக்க மகிழ்ச்சியளிக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தாள்விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 1) நடந்தது. இந்தக் கூட்டத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீஹார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "லட்சியவாதிகளுக்கு என்று வயதாவது இல்லை. நம்முடைய லட்சியத்தை வென்றெடுக்க உடன்பிறப்புகளாக்கிய நீங்கள் என்னோடு அணிவகுத்து வருகிறபோது, நாளுக்கு நாள் நான் இளமையாகிவிடுகிறேன். துடிப்புமிக்க இளைஞனாகி விடுகிறேன். ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்னாள் அடிக்கல் நாட்டிவிட்டு, இன்றுவரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல், தமிழ்நாட்டை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. மொத்தமே 12 கோடி ரூபாய் மட்டும்தான் மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது 8 கோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் காரியம்.

8 கோடி மக்கள் பிரதிநிதிகளால், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஒன்றிய அரசு நாட்களைக் கடத்த முடியுமேயானால், தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்துக்கு கோடி கோடியாக பணத்தை ஒதுக்கிவிட்டு, சங்கத் தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவாய் என்றால், இதனால் அவமானப்படுத்தப்படுவது யார்? திருவள்ளுவரும் இளங்கோவடிகளும். இதனை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இவை எல்லாம் அரசியல் கொள்கைகள்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஒரு சட்டம் கொண்டுவந்து அதை நிறைவேற்றி அனுப்பினோம். அதற்குகூட இங்கே ஆளுநராக இருப்பவர் ஒப்புதல் அளிக்கவில்லை. மகாபாரதத்திலே சூதாட்டம் இருக்கிறது என்று நினைத்து தடை செய்ய மறுக்கிறார்களா?

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. முறையாக நிதிகள் வழங்கப்படுவது இல்லை. ஜிஎஸ்டிக்குப் பிறகு நிதி உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லவே இல்லை. இழப்பீடுகளை உரிய காலத்திற்குள் தருவதும் கிடையாது. ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்தப் பெரிய திட்டங்களும் கிடையாது. இப்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுடன் நிர்வாக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக.

பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களைப் புரிந்துகொண்டு கொள்கை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் களம். அந்தக் களத்திற்குப் போவதற்கு போர் வியூகங்களை வகுக்கக்கூடிய பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அமைந்திருப்பது எனக்க மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தக் கூட்டத்திற்ககு வந்திருக்கும் அகில இந்திய தலைவர்கள் இந்தத் தகவல்களை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள். இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் எடுத்துச் செல்லுங்கள், ஒற்றுமையை வலியுறுத்துங்கள். வெற்றிக்கு அடித்தளமிடுங்கள். இப்போதை விதைப்போம். அடுத்தாண்டு மார்ச் என்பது அறுவடைக் காலமாக அமையட்டும்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தொண்டர்களு்ககு ஒரு வரலாற்றுக் கடமை இருக்கிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முழுமையான வெற்றியை பெற்றாக வேண்டும். கலைஞர் வழிநடத்திய 2004-ல் 40க்கு 40-ல் வெற்றி பெற்றோம். கடந்த தேர்தலில் ஒரேயொரு தொகுதியை இழந்தோம். அதோடு சேர்த்து 40-ஐயும் நமது அணி மீண்டும் கைப்பற்றியாக வேண்டும். அதற்காக கட்சித் தொண்டர்கள் இன்று முதல் உழைத்திட வேண்டும். அதுதான் நீங்கள் எனக்குதரும் பிறந்நதநாள் பரிசாக இருக்கும்" என்று ஸ்டாலின் பேசினார்.

இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, "தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி, 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல், 2006, 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளுக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டணியை வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை தொடரவும் வலுப்படுத்தவும் விரும்புகிறோம். இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்ற பெறும்" என்றார். விரிவாக வாசிக்க > மக்களவைத் தேர்தலில் திமுக - காங். கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்: சென்னை நிகழ்வில் கார்கே நம்பிக்கை

இக்கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, "கரோனா காலக்கட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட சிறப்பான பணிகளாலும், குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் பிற மக்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகளாலும் தமிழக மக்கள் கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டனர்" என்றார். விரிவாக வாசிக்க > “முதல்வர் ஸ்டாலினின் சமூக நீதி முன்னெடுப்புகள்...” - சென்னை நிகழ்வில் அகிலேஷ் யாதவ் புகழாரம்

இக்கூட்டத்தில் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா பேசும்போது, "இந்த மேடையில் இல்லாத தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது விழித்துக் கொள்ளுங்கள். அனைத்து மக்களும் மரியாதை, மாண்பு, அமைதியுடன் வாழும் நாட்டை கட்டமைக்க நாம் ஒன்றிணைய வேண்டும்" என்றார். முழுமையாக வாசிக்க > “நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேணடும்” - ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா அழைப்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x