Published : 28 Feb 2023 07:30 PM
Last Updated : 28 Feb 2023 07:30 PM

“நீட் தேர்வு விலக்கு குறித்து கோரிக்கை வைத்தேன்” - பிரதமர் மோடியை சந்தித்த உதயநிதி தகவல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி

புதுடெல்லி: "நீட் தேர்வு விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அது தொடர்பாக பிரதமர் சில விளக்கங்களை அளித்தார். இந்த விவகாரத்தில் திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று பிரதமரிடம் கூறியதாக, தமிழக இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (பிப்.28) சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "கடந்த முறை சென்னை வந்த பிரதமர், அடுத்த முறை டெல்லி வரும்போது தன்னை பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டோம், உடனே கொடுக்கப்பட்டது. பிரதமரைச் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல் பிரதமரின் தாயார் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன்.

தமிழகத்தில் விளையாட்டு தொடர்பான விஷயங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். முதல்வர் கோப்பை குறித்த விவரங்களை எடுத்துக் கூறினேன். அடுத்தமுறை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதேபோல், இந்திய விளையாட்டு ஆணையம் தமிழகத்திற்கு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.

அதேபோல், நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது அது தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இதுதான், அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கூறினேன். அதேபோல், திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறினேன்.
பிரதமர் உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர், திறன் மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கான‌ கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மானியங்கள் குறித்து, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து அமைச்சர் உதயநிதி கோரிக்கை வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x