Published : 28 Feb 2023 07:13 PM
Last Updated : 28 Feb 2023 07:13 PM

மூத்த குடிமக்கள் ரயில் பயணக் கட்டண சலுகை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும்: தர்ஷனா ஜர்தோஸ் தகவல்

கரூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்கிறார் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ்

கரூர்: மூத்த குடிமக்கள் ரயில் பயண கட்டண சலுகை குறித்து அமைச்சரவை முடிவு எடுக்கும் என மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் தெரிவித்தார்.

கரூர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் இன்று (பிப்.28ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு முன்னதாக கரூர் ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் மரக்கன்று நட்டார். தொடர்ந்து விசாரணை பிரிவு, ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் திட்டத்தில் கரூர் ரயில் நிலையத்தில் இடம் பெற்றிருந்த முருங்கைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் முருங்கை சூப்பை வாங்கி சுவைத்தார். தொடர்ந்து பெண்கள், ஆண்கள் ஓய்விடங்கள், கண்காணிப்பு அறை ஆகியவற்றை பார்வையிட்டார்.

கரூர் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் ஒரு பொருள் விற்பனை நிலையத்தில் முருங்கை சூப்பை சுவைக்கிறார்
மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ்.

தொடர்ந்து உணவுப் பொருட்கள் (கேட்டரிங் ஸ்டால்) நிலையத்தில் தேநீர் வாங்கி சுவைத்தவர். மேலும் ஒருவருக்கு தேநீர் வாங்கி வழங்கியதுடன் பேடிஎம் மூலம் அதற்கான தொகையையும் செலுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியது, ''கரோனாவுக்கு பிறகு சிறப்பாக செயல்பட்டு பிரிட்டனை வீழ்த்தி இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. 75வது சுதந்திர தினத்தையொட்டி அம்ரித் பாரத் திட்டத்தில் 100 ரயில் நிலையங்கள் சிட்டி சென்டர் ரயில் நிலையங்களாக மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் கரூர் ரயில் நிலையமும் ஒன்று. கரோனா காலத்தில் மூத்த குடிமக்கள் சிலர் தாங்களாக முன் வந்து கட்டண சலுகைகளை விட்டுக் கொடுத்தனர். மூத்த குடிமக்கள் ரயில் பயண கட்டண சலுகை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யும். வளர்ச்சிப் பணிகள் அடிப்படையில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையை 12லிருந்து 75ஆக அதிகரிக்கப்படும்.

கரூர் ரயில் நிலையத்தில் உணவுப்பொருள் விற்பனை நிலையத்தில் வாங்கிய தேநீருக்கு பேடிம் மூலம் பணம் செலுத்துகிறார் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ்.

மேலும் ரயில் நிலைய வளர்ச்சி, போக்குவரத்து, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும். எத்தகைய திட்டங்கள் தேவை என்பது குறித்து அறிவதற்காக ஐஐடி மாணவர்கள் மூலம் தனியாக ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் வளர்ச்சித் திட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்படும்'' என்றார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் கவுதம் சீனிவாஸ், கூடுதல் மேலாளர் சிவசங்கர், கரூர் ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன், முதன்மை வணிக அலுவலர் சிட்டிபாபு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சென்னை சேலம் விரைவு ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் மத்திய இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸிடம் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x