Published : 26 Feb 2023 07:18 AM
Last Updated : 26 Feb 2023 07:18 AM

அதிமுக திட்டங்களை நிறுத்தியது திமுக அரசு - ஈரோட்டில் பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம்சாட்டினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பிராமண பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட இடங்களில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அவர் பேசியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து கேட்டால், பட்டா கொடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 24 லட்சம் பேருக்கு பட்டா கொடுத்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத் திட்டங்களை, திமுக அரசு நிறுத்திவிட்டது. முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை நிறுத்திவிட்டு, தன்னை சூப்பர் முதல்வர் என்று ஸ்டாலின் அறிவித்துக் கொள்கிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப்பொருள் விற்பனை அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால், உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 32 சதவீதத்தில் இருந்து 54 சதவீதமாக உயர்ந்தது. கடந்த 22 மாதங்களில் ஊழல் செய்து கொள்ளையடித்த பணத்தை, இந்த தேர்தலில் தண்ணீர்போல் செலவழிக்கின்றனர். இவற்றை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தபோது, 1.34 லட்சம் கோடி கடன் இருந்தது. 10 ஆண்டுகள் ஆட்சி செய்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி, கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டபோதும், கடன் தொகை உயரவில்லை. ஆனால், நிதிநிலையை சீராக்குவதாக கூறிய திமுக ஆட்சியில், 2 ஆண்டுகளில் 1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.

25 மாநிலங்கள் பெட்ரோல் விலையை குறைத்தும், திமுக அரசு விலையைக் குறைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். அகவிலைப்படி உயர்வையும் வழங்கவில்லை. பாமரர் முதல் படித்தவர் வரை அனைவருக்கும் நாமம் போட்டுவிட்டனர். திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி. ஆனால், அதிமுக சாதி, மதங்களைக் கடந்த கட்சி. தமிழகத்தில் பிறந்த இஸ்லாமியர் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும். ‘நீட்’ தேர்வு ரகசியத்தை வெளியிடுவதாக உதயநிதி ஏமாற்றியதால், 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு திமுகவும், உதயநிதியும்தான் பொறுப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

எல்இடி திரை, ரஜினி வீடியோ: அவரது பிரச்சாரத்தின் போது ‘நீட்’ தேர்வு குறித்து நளினி சிதம்பரம் தெரிவித்த கருத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை எல்இடி திரையில் காட்டி, ‘அவை நிறைவேற்றப்படவில்லை’ என்பதை பழனிசாமி சுட்டிக்காட்டினார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அவரை புகழ்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ குறித்த செய்தியையும், பிரச்சாரத்தின்போது பழனிசாமி வாசித்துக் காட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x