Published : 31 May 2017 10:47 AM
Last Updated : 31 May 2017 10:47 AM

பசு, காளை விற்பனைத் தடை மனித உரிமைகள் மீதான அத்துமீறல்: எஸ்.செல்வகோமதி

பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், கொல்வதற்கும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தடை விதிக்கக் கோரியும் இருந்தார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வ கோமதி. தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் அவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "மத்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ல் இறைச்சிக் காக விலங்குகளை விற்கவும், பலியிடவும், சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சட்டத்துக்கு விரோதமாக பசுக்கள் உள்ளிட்ட விலங்குகளை இறைச்சிக்காக வெட்டவோ, வாங்கவோ தடை விதிக்கும் பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்கும் (விற்பனை சந்தை நெறிப்படுத்து தல்-2017) என்ற விதியை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை. மாநில அரசுகளுடன் ஆலோசிக்கவில்லை. மத நிகழ்ச்சிகளில் பலியிடுவதற்கும் பிராணிகளை வாங்கவும், விற்கவும் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள், மாடு விற்பனையாளர்கள், விவசாயிகள், சார்பு தொழிலில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்தியாவில் ஒரு மனிதன் கவுரவமாக உயிர் வாழவும், தான் விரும்பியதைச் சாப்பிடவும் அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அந்த உரிமையில் யாரும் தலையிட முடியாது.

மொத்தத்தில் மத்திய அரசின் தடை உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 19, 21, 25, 29 ஆகியவற்றை மீறுவதாக அமைந்துள்ளது.

மேலும் ஏழை விவசாயிகள், விற்பனையாளர்கள், இறைச்சிக் கடை நடத்துவோர், இறைச்சி உண்ணும் பெரும்பான்மையான மக்களின் மீது தொடுக் கப்பட்ட தாக்குதல் ஆகும். எனவே மத்திய அரசின் தடை உத்தரவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு வழக்கறிஞர் செல்வ கோமதி அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

இந்த வழக்கைத் தொடர எது தூண்டுதலாக இருந்தது?

கடந்த 20 ஆண்டுகளாகவே நான் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். மனித உரிமைகளைப் பேணுவதே எனது இலக்காக இருந்துள்ளது. கடந்த 23-ம் தேதி (மே 23) மத்திய அரசு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. அந்த அரசாணை அரசியல் சாசனம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளை அத்துமீறுவதாக இருப்பதை முதல்முறை அதை வாசித்தவுடனேயே தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்லாது மனித உரிமைகளை அத்துமீறுவதாகவும் அந்த அரசாணை அமைந்துள்ளது. அதன் காரணமாகவே இந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்தேன்.

இந்தச் சட்டம் மனித உரிமைகளை அத்துமீறுகிறது என்பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்?

இந்தச் சட்டம் தலித் உரிமைகளையும், சிறுபான்மையினர் உரிமைகளையும் அத்துமீறுகிறது. சிறுபான்மையினர், தலித்துகள் உணவுப் பழக்கத்தில் மாட்டிறைச்சி அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அசைவ உணவுப் பிரியர்களின் உரிமையையும், மதச் சடங்குகளுக்காக விலங்குகளை பலி கொடுப்பவர்களின் நம்பிக்கையையும் அத்துமீறுவதாக இருக்கிறது.

இந்த இடைக்காலத் தடை வெற்றி எனக் கருதுகிறீர்களா?

மாட்டிறைச்சி விற்பனைத் தடை நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள நிலையில் இந்த இடைக்கால தடை உத்தரவு நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி என்றே கூறுவேன். இந்தத் தடை உத்தரவால் மத்திய அரசின் சட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களுக்கும் இடையேயான மோதலைத் தவிர்க்கும். ஏற்கெனவே அதிகாரிகள், மத்திய அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டிவரும் நிலையில். நீதிமன்ற தடை உத்தரவானது அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இந்த வழக்கு தர்க்க ரீதியாக நியாயமான வெற்றியைப் பெறும் வரையில் எனது போராட்டம் தொடரும். மத்திய அரசே முன்வந்து சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமானால் அது வரவேற்கத்தக்கது. இல்லையேல் இந்த சட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கும்வரை எனது வழக்கறிஞர்கள் போராடுவார்கள்.

மிருகவதை ஏற்புடையதுதானா எனக் கேள்வி எழுப்பும் விமர்சகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

உங்களுக்கு இது நம்பும்படியாக இல்லாமல் இருக்கலாம். நான் முட்டைகூட உண்ண மாட்டேன். எனது சுய விருப்பதினால் நான் சைவ உணவை சாப்பிடுகிறேன். ஆனால், எந்த உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இந்த உணவைத்தான் உண்ண வேண்டும் என யாரும் யாரையும் நிர்பந்திக்கக் கூடாது. என்னைப் போன்ற சைவ உணவு உண்பவர்களை அசைவம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவது எப்படி உரிமை மீறலாகுமா அதேபோல் அசைவப் பிரியர்களை சைவம் உண்ணச் சொல்வதும் அத்துமீறலே. ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது மதம், கலாச்சாரம் சார்ந்த பழக்கவழக்கங்களை பின்பற்றும் அதிகாரம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x