Published : 24 Feb 2023 04:44 PM
Last Updated : 24 Feb 2023 04:44 PM

பணப் பட்டுவாடா புகார்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் சட்டத் துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கட்சியின் பிரச்சாரத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். போதுமான அளவு மத்திய படை பாதுகாப்பு, சிசிடிவி கேமரா, வெப்காஸ்டிங் வசதி ஆகியவற்றை அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இதேபோல், சுயேச்சை வேட்பாளர் ரவி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் மதுபானம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக அமைத்துள்ள கொட்டகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “பணப் பட்டுவாடாவைத் தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தேர்தலை நியாயமாக நடத்துவது குறித்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரித்து, முகாந்திரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதியில் 163 கொட்டகைகள் கண்டறியப்பட்டன. அதில் 107 கொட்டகைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளன. 42 கொட்டகைகளை சம்பந்தப்பட்ட கட்சியினரே அகற்றி விட்டனர். எஞ்சிய கொட்டகைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு பேரணி சென்றனர். பிளாஸ்டிக் பைப்புகளுக்குள் இரும்பு பைப்புகளைப் பொருத்தி வன்முறையில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையேயான மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்குகளில், அதிமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர்களின் புகார்களை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்குகளை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x