Published : 16 May 2017 08:44 AM
Last Updated : 16 May 2017 08:44 AM

வேலை நிறுத்த போராட்டம்: முதல்வர் பழனிசாமி தலையிட்டு தீர்வு காண வேண்டும் - போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நலன் கருதி அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டுமென போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங் களின் கூட்டறிக்கையில் கூறியிருப்ப தாவது:

அரசு போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் தொடங்கி விட்டது. இதற்கு அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பொதுமக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இக்கூட்டமைப்பு வருந்துகிறது. போக்குவரத்துத் தொழி லாளர்களின் நியாயமான போராட்டத் துக்கு ஆதரவு அளித்து வரும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

போக்குவரத்து ஊழியர்களின் ரூ.7,000 கோடி பணத்தை எடுத்து போக்குவரத்துக் கழகங்கள் செலவழித்து உள்ளன. ஓய்வு பெற்று வீட்டுக்கு போகின்றவர்களின் சேமிப்பு தொகை ரூ.1,700 கோடியை பல ஆண்டுகளாக வழங்காத பாத கத்தை அரசே செய்துள்ளது. இதில் ரூ.500 கோடி அடுத்த செப்டம்பரில் வழங்குவோம் என்று அமைச்சர் கூறுகின்றார்.

மொத்தத்தில் இப்போது வழங்கியுள்ள ரூ.750 கோடியும் கூட நீதிமன்ற உத்தரவு களின்படியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளவற்றிற்காகவும் தரப்பட வேண்டிய தொகைதான். புதிதாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுத்தது போன்ற தோற்றத்தை உண்டாக்க அரசு முயற்சிக்கிறது.

போக்குவரத்துக் கழகங்கள் அரசின் கொள்கை மற்றும் சமூகத்திற்கு செய்யும் உதவிகள் காரணமாக இழப்பை சந்திக்கின்றன.

மாணவர் இலவச பயணம், நஷ்டமான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்குவது போன்றவை மிகவும் தேவையான சமூக நடவடிக்கைகள் ஆகும். எனவே, போக்குவரத்துக் கழக இழப்புகளை அரசு ஈடு செய்ய வேண்டும். இதற்கான கொள்கை அறிவிப்பை நம்பகத்தன்மையுள்ள அளவில் அரசு எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிறைவேறா மல் உள்ள ஓய்வுகால சேமநல நிதி தொகை உட்பட அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் மாநிலத்தின் இதர பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது. இவற்றை சரி செய்து 13-வது ஊதிய ஒப்பந்தத்தைப் போட வேண்டும்.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர் களின் ஓய்வூதியம், தினக் கூலி தொழிலாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் ஆகியவற்றை ஒப்பந்தப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலை நிறுத்தத்தை உடைக்க வேறு பேருந்துகளை இயக்குவது, புதியவர்களை வைத்து ஓட்டுவது போன் றவை ஐ.எல்.ஓ. (சர்வதேச தொழிலாளர் கள் விதிகள்) விதிமுறைகளுக்கு விரோதமானது. இதுபோன்ற அபாய செயல்களில் ஈடுபடாமல் பிரச் சினைக்கு முடிவு காண அரசு முன்வர வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி முதல்வர் உடனே தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். தொழிற்சங்கங்கள் பிரச்சினைகளை பேசித் தீர்க்க தயாராகவே உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x