Published : 19 Feb 2023 02:45 PM
Last Updated : 19 Feb 2023 02:45 PM

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா என பேச்சுப் போட்டியே வைக்கலாம்: கே.எஸ்.அழகிரி

கும்பகோணம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா வராதா எனப் பேச்சுப் போட்டியே வைக்கலாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது: மோடியின் ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கின்றார். நாடு விழுந்திருக்கின்றது. அது தான் தற்போது நடந்திருக்கின்றது. பொது மக்கள் பணத்தில் இயங்கக்கூடிய பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி தொகையை இழந்திருக்கின்றார்கள். அவர்களை, அதானி குழுமத்தில் முதலீடு செய்யப் பிரதமர் அலுவலகத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல், முறைகேடு அமெரிக்கா வரை பரவியுள்ளது. ஆனால் பிரதமர் மோடி வாய் திறந்து பதில் சொல்ல வில்லை. நிதியமைச்சரும் தெளிவான பதிலைச் சொல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்குப் பதில் கூறாமல், காஷ்மீரில் வன்முறை குறைந்துள்ளது என கூறுகிறார்.

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் உயிரிழந்தது தற்செயலாக நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட திமுகவைச் சேர்ந்தவர் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக இருக்கிறது. தஞ்சாவூர்-விக்கரவாண்டி சாலைப் பணிகள் மிகவும் தாமதமாகவும், மோசமாகவும் நடைபெற்று வருகிறது. இதே போல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நடக்குமா நடக்காதா என பேச்சுப் போட்டியே வைக்கலாம். இதற்கு தமிழகத்திலுள்ள பாஜகவினர் போராடவும் இல்லை. அவர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தவும் மறுக்கிறார்கள். அவர்களுக்கு, அவர்களது கட்சியில் செல்வாக்கு உள்ளதா என்பதே தெரிய வில்லை.

ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும், ஒ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பது போல் தெரியவில்லை. அவர்கள் தனித்தனியாகத் தான் இருக்கின்றார்கள். ஆனாலும் ஈரோட்டில் மகத்தான வெற்றி பெறுவோம். ஈரோடு இடைத்தேர்தல். திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களுக்கான சான்றிதழ் வழங்கும் தேர்தல் இது” எனத் தெரிவித்தார். அவருடன் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.ஆர்.லோகநாதன், மாநகர மேயர் க.சரவணன், மாநகரத் தலைவர் மிர்சாவூதீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x