Published : 19 Feb 2023 07:17 AM
Last Updated : 19 Feb 2023 07:17 AM
மதுரை/கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் இசை நிகழ்ச்சிகளுடன் நடந்த மகா சிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் ஆன பிறகு திரவுபதி முர்மு, நேற்று முதன்முறையாக தமிழகத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார். இதற்காக, புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு நேற்று காலை 11.40 மணிக்கு வந்தார்.
அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், விமான நிலையத்திலிருந்து காரில் மீனாட்சி அம்மன் கோயில் கீழச்சித்திரை வீதியில் உள்ள அம்மன் சந்நிதி நுழைவு வாயிலுக்கு வந்தார். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் அவரை வரவேற்றனர்.
பின்னர், அம்மன் சந்நிதிக்கு முன்பு தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஓய்வறையில் குடியரசு தலைவர் சில நிமிடம் ஓய்வெடுத்தார். பின்னர், 12.05 மணிக்கு அம்மன் சந்நிதி வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்தார்.
அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் குடியரசு தலைவருக்கு மேளதாளம், வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
அதனை ஏற்ற குடியரசு தலைவர் முதலில் மீனாட்சி அம்மனை தரிசித்தார். பின்னர் சுவாமி சந்நிதி, கொடிமரம், துர்க்கை அம்மன் சந்நிதிக்கு சென்றார். கோயில் சிற்பங்கள், கலைநயங்களை சிறிது நேரம் நின்று பார்த்து ரசித்தார்.
திருவிளையாடல் புராண நிகழ்வு உள்ளிட்ட கோயிலின் வரலாற்று சிறப்புகளை குடியரசு தலைவருக்கு சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகியோர் விளக்கினர். பின்னர், வெண்கலத்தால் ஆன மீனாட்சி அம்மன் சிலை பரிசாக வழங்கப்பட்டது.
பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தாழம்பூ குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கோயிலில் உள்ள விஐபி வருகைப்பதிவேட்டில் கோயில் பற்றிய குறிப்புகளை குடியரசு தலைவர் எழுதி கையெழுத்திட்டார். பின்னர் தரிசனம் முடித்து 12.50 மணிக்கு கோயிலிலிருந்து வெளியே வந்தார். 45 நிமிடங்கள் அவர் கோயிலுக்குள் இருந்தார்.
பின்னர், பிரத்யேக ஓய்வறையில் 5 நிமிட ஓய்வுக்குப் பிறகு கோயில் அம்மன் சந்நிதி கிழக்கு வாயில் வழியாக 12.55 மணிக்கு வெளியே வந்தார்.
பாதுகாப்பு வாகனங்கள் சூழ அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு பிற்பகல் 2.05 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து மதுரை விமானம் நிலையம் சென்றார். அங்கிருந்து கோவைக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
இதைத் தொடர்ந்து கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வரவேற்றார். இங்கு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை தியானலிங்கத்தில் நடந்த பஞ்சபூத க்ரியையுடன் தொடங்கியது. முன்னதாக லிங்கபைரவி யாத்ரா வழிபாடு, ஆதியோகி முன்பு நடைபெற்றது.
திரவுபதி முர்மு, தியானலிங்கம், சூரிய குண்டம், லிங்கபைரவி ஆலயம் ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இவற்றின் பெருமையை, குடியரசுத் தலைவருக்கு சத்குரு விளக்கினார். அதைத்தொடர்ந்து ஆதியோகி சிலை உள்ள வளாகத்தில் மகா சிவராத்திரி விழாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்து பேசினார்ர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT