Published : 17 Feb 2023 07:48 PM
Last Updated : 17 Feb 2023 07:48 PM

மீனவர் சுட்டுக் கொலை | கர்நாடக வனத்துறையினர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்குமா? - சீமான் கேள்வி

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "ஆந்திரக் காடுகளில் அம்மாநில அரசால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமைதி காத்த அதிமுக அரசினைப்போல, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த இந்திய ஒன்றிய அரசினைப்போல அல்லாது திமுக அரசாவது கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமா?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலாற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராஜா கொல்லப்பட்டிருப்பது பேரதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள தமிழக – கர்நாடக வனப்பகுதியில் காவிரியும் பாலாறும் இணையும் இடத்தில் தமிழக மீனவர்கள் பரிசல்களில் காலங்காலமாகப் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாலாற்றில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் பரிசல்கள் மீது அத்துமீறி கர்நாடக வனத்துறையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கோவிந்தபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா கொல்லப்பட்டிருப்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

தமிழ்நாட்டு எல்லைக்குள் தமிழர்களுக்குச் சொந்தமான பாலாற்றில் மீன்பிடிக்க தமிழ் மீனவர்களுக்கு உரிமை இல்லையா? அப்படியே கர்நாடக எல்லைக்குள் ஒருவேளை தவறுதலாக நுழைந்திருந்தாலும் அவர்களை எச்சரித்து அனுப்பி இருக்கலாமே? கொல்லப்படும் அளவிற்கு அவர்கள் செய்த கொடிய குற்றம்தான் என்ன? இந்திய ஒருமைப்பாடு, திராவிட ஒற்றுமை என்றெல்லாம் பேசுபவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? இந்தியம், திராவிடம் இவற்றில் ஏதாவது ஒரு உணர்வு இருந்திருந்தாலே என் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்களே? அப்படியென்றால் அவையெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வெறும் வாய் வார்த்தைகள் மட்டும்தானா?

ஒரே நாடு – ஓரே வரி, ஒரே தேர்தல், ஒரே குடும்ப அட்டை என்றெல்லாம் ஒருமைப்பாடு பேசும் ஒரே நாட்டிற்குள் மீன் பிடிக்க மட்டும் உரிமை இல்லையா? தமிழ்நாட்டிற்குள் இந்திக்காரரர்களின் பெருமளவு வருகை குறித்து கேள்வி எழுப்பியபோதெல்லாம், சனநாயகம் பேசியவர்கள் இப்பொது வாய் திறப்பார்களா? தமிழ்நாட்டு மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடக மீனவர் மீது கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? குஜராத் மீனவர் சுட்டு கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்து, பாகிஸ்தான் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த மோடி அரசு கர்நாடக வனத்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?

ஆந்திரக் காடுகளில் அம்மாநில அரசால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது அமைதி காத்த அதிமுக அரசினைப்போல, இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்த இந்திய ஒன்றிய அரசினைப்போல அல்லாது திமுக அரசாவது கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது கேரள அரசின் எல்லை அபகரிப்பை வேடிக்கை பார்த்ததுபோல் இக்கொடிய நிகழ்வையும் வழக்கம் போலக் கண்டும் காணாமல் கடந்து போகுமா திமுக அரசு? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் எழுந்துள்ளது. இதற்கு முன்பே இருமுறை கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிந்துள்ளதாக அங்கு வாழும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தற்போது தம்பி ராஜாவின் உடலிலும் துப்பாக்கியால் சுட்ட’ தடயங்கள் உள்ள நிலையில் இனியும் தமிழ்நாடு அரசு அமைதி காப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழக மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து அவர்களை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ. 50 லட்சம் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x