Published : 28 May 2017 11:51 AM
Last Updated : 28 May 2017 11:51 AM

அமராவதி அணையில் மண் எடுக்க வனத்துறை எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட பகுதியில் அமராவதி அணை அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அமராவதி வனத்துறையின் மொத்த பரப்பு 20740 ஹெக்டேர். இங்கு புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமை, காட்டு மாடுகள், புள்ளி மான்கள், கடமான்கள் உட்பட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்கின்றன.

இதுகுறித்து சூழல் ஆர்வலர் முகமது உசேன் கூறும்போது, “யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக இம்மலைப் பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அணையின் பின்புறமுள்ள தூவானம், கழுதகட்டி ஓடை, வரவண்டி ஓடை, புங்கன் ஓடை, தேனாறு உள்ளிட்ட வனப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. அணையில் உள்ள நீரை பருகி வாழ்ந்து வருகின்றன.

பகல் மற்றும் மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் தண்ணீருக்காக அமராவதி அணையை தேடி வருகின்றன.

இந்நிலையில் அமராவதி அணையில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. பொக்லைன் வாகனங்களும் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. நிமிடத்துக்கு ஒரு லாரி வீதம் இயக்கப்படும் கனரக வாகனங்களால் எழுப்பப்படும் இரைச்சல், கிளம்பும் புழுதி, வெளியேற்றப்படும் புகை ஆகியவற்றால் வனப்பகுதியின் சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், அங்குள்ள மாந்துறையில் இருந்து முதலைகள் பண்ணை வரை காட்டு வழியில் பாதை அமைத்து, அந்த வழியாக லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என, நேற்று ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் விவசாயிகள் சிலர் அனுமதி கோரினர்.

அமராவதி வனத் துறையினர் கூறும்போது, “அணையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள மாந்துறை, வண்டிப்புலியமரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அங்கும் ஏராளமான விலங்குகள் வருவது வழக்கம். தற்போது வண்டல் மண் எடுக்கும் இடமும், வன விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதியாக உள்ளது.

மாந்துறையில் இருந்து கல்லாபுரம் வரை உள்ள வனப்பகுதி, அதிக அளவில் யானைகள் முகாமிடும் பகுதி. சிறுத்தைகளும் அதிக அளவில் வசிக்கின்றன. அந்த வழியாக வாகனங்களை இயக்கினால், அதற்கு பயந்து அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் விலங்குள் நுழைய வாய்ப்புள்ளது. இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.

வன விலங்குகள் வந்து செல்லும் நேரங்களில், அவற்றுக்கு இடையூறு இல்லாமல் அணையை தூர்வார வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x