Published : 13 Feb 2023 04:13 AM
Last Updated : 13 Feb 2023 04:13 AM

காதலர் தினத்தன்று பசுமாட்டை அரவணைக்கும் நிகழ்ச்சி: அர்ஜூன் சம்பத் தகவல்

ஜோலார்பேட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன் சம்பத்.

திருப்பத்தூர்: இந்து மக்கள் கட்சி சார்பில் காதலர் தினத்தன்று தமிழகம் முழுவதும் பசுமாட்டை அரவணைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பஜனை கோயில் தெருவில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா, பட்டாபிஷேக ராமர் ஆண்டாள் கோயிலில் பிரதிஷ்ட தினவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில நிர்வாகி ரவீந்திரன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி நிர்வாகி மணி வரவேற்றார்.

இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வாணியம் பாடியில் ஆன்மிக பக்தர் ஒருவர் தைப் பூசத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடத்த முயன்றார். அப்போது,கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் எனவே பாதுகாப்பு வழங்க வேண் டும் என காவல் துறைக்கு அவர் மனு அளித்திருந்தார். ஆனால், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இதில் சரியான நட வடிக்கை எடுக்காமல் கவனக் குறைவோடு செயல்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் கடந்த வாரம் வேலூர் மாவட்டத்துக்கு ஆய்வு பணி நடத்த வந்த பிறகு காவல் துறை உள்ளிட்ட சில துறையில் அதிகாரிகளை மாற்றியுள்ளார். இந்த நடவடிக்கை போதாது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், மோசடி, வன்முறை அதிகரித்து கொண்டே போகிறது.

பிப்ரவரி 14-ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து மக்கள் கட்சி கடைபிடிக்கும்.காதலர் தினம் எனக் கூறி சில அமைப்புகள் தொடர்ந்து கலாச்சாரம், பண்பாடு களை சீரழிக்கும் வகையில் ஈடுபடுகின்றனர். ஆனால், அன்றய தினம் விலங்குகள் வாரியம், காதலர் தினம் கொண்டாடுவதற்கு பதிலாக பசுமாடு அரவணைக்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தது.

அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அதனை திரும்பப் பெற்றது. ஆனால், இந்து மக்கள் கட்சியினர் காதலர் தினத்தன்று தமிழகம் முழுவதும் பசுமாட்டை அரவணைக்கும் நிகழ்ச்சியை நடத்துகின்றோம். மேலும்,ஏப்ரல் 2-ம் தேதி தூத்துக்குடியில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்து கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும்’’என்றார்.

நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் செல்வம், செயலாளர் கமலக்கண்ணன், மாவட்டத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x