Last Updated : 25 May, 2017 08:50 AM

 

Published : 25 May 2017 08:50 AM
Last Updated : 25 May 2017 08:50 AM

தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கொடைக்கானல்: ஒரு லாரி தண்ணீர் ரூ.4,000; சிறுநீர் கழிக்க ரூ.10 கட்டணம் - போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக் கானல், தண்ணீர் பஞ்சம் மற்றும் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப் படுகின்றனர். பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த கடும் வறட்சி, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலையும் விட்டுவைக்கவில்லை. உள்ளூரில் இருக்கும் மக்களுக்கே தண்ணீர் இல்லாத நிலையில், கோடை சுற்றுலாவுக்காக ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்துசேர, தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறது கொடைக்கானல்.

தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒரு லாரி தண்ணீர் (5000 லிட்டர்) இங்கு 4000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த தண்ணீரைப் பெறவும் 2 நாட்களுக்கு முன்பே சொல்லிவைக்க வேண்டியுள்ளது. இப்படிப் பணம் கொடுத்து வாங்கும் நீரும் சுத்தமில்லாமல் கலங்கலாக உள்ளது. தண்ணீர் பஞ்சத்தை வைத்து காசாக்க விரும்பும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சிலர், அசுத்தமாக உள்ள கொடைக்கானல் ஏரி நீரைத் திருடி விற்பதே இதற்கு காரணம்.

இதனால் சில சுற்றுலா விடுதி உரிமையாளர்கள், தங்கள் விடுதியில் தங்க ஏற்கெனவே முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுத்து, அவர்களின் முன்பதிவை ரத்து செய்து விடுகிறார்கள். இதனால் இந்த சீசனில் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஒரு சில விடுதி உரிமையாளர்கள், தண்ணீரின் விலையையும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் வசூலித்து விடுகிறார்கள். இதனால் விடுதிகளில் தங்க சுற்றுலா பயணிகள் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.

விடுதிகளில்தான் இப்படியென் றால் கட்டணக் கழிப்பிடங்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. பல கட்டண கழிப்பிடங்களில், பயணிகளிடம் இருந்து 10 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். வேறு வழி இல்லாததால் சுற்று லாப் பயணிகளும் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து விடுகிறார் கள். இதுபற்றி கேட்டால், “அதிக விலை கொடுத்து கழிப்பிடத்துக்கு தண்ணீர் வாங்குகிறோம் அதனால் 10 ரூபாய் வாங்கினால்தான் கட்டுப்படியாகிறது” என்கிறார்கள்.

நாளொன்றுக்கு கொடைக் கானலை சுற்றிப்பார்க்க ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 வரை பல்வேறு பேக்கேஜ்கள் உள்ளன. ஆனால் இந்த அளவுக்கு பணத்தைக் கொடுத்து கொடைக்கானலைப் பார்க்க கிளம்பும் சுற்றுலாப் பயணிகள், பட்டியலில் உள்ள அத்தனை இடங்களையும் பார்க்க முடிவதில்லை. காரணம் போக்கு வரத்து நெரிசல். கொடைக்கானல் சாலையில் நூற்றுக்கணக்கான கார்களும், வேன்களும் நெரிசலில் சிக்கி, மெதுவாக ஊர்ந்து செல்வதால், ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது. அதிலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ஒரு மணி நேரம்வரை ஆகிறது. சுற்றுலாத் தலங்களில் போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லாததால் அவற்றைப் பார்க்கவரும் பயணிகள் சாலை ஓரங்களில் வாகனங்களைப் பார்க்கிங் செய்வதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

ஒரு இடத்துக்கு செல்வதற்கே நீண்டநேரம் ஆவதால், இருட்டு வதற்குள் பட்டியலில் உள்ள அத்தனை இடங்களையும் பார்க்க முடியாமல் அறைக்குத் திரும்புகிறார்கள் சுற்றுலாப் பயணிகள். இந்த காரணத்தால் பேக்கேஜ் சிஸ்டத்தை விட்டு தனியாக கார்களில் செல்லலாம் என்று நினைத்தாலும் அவற்றின் வாடகைக் கட்டணம் விழிபிதுங்க வைத்து விடுகிறது. 2 கிலோமீட்டர் தூர பயணத்துக்கே 200 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.

கொடைக்கானலில் பயணி களுக்கு இத்தனை சிரமம் இருக் கும் அதே நேரத்தில், பயணிக ளாலும் கொடைக்கானல் மூச்சுத் திணறி வருகிறது. மலைப் பிரதேசத்தில் பிளாஸ்டிக்கை பயன் படுத்த வேண்டாம் என்று கோரும் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தாலும், இதை யாரும் கண்டுகொள்வதாய் இல்லை. பலரும் வாகனங்களில் சாப்பிட்டுவிட்டு, எச்சில் உணவை பிளாஸ்டிக் பைகளோடு சேர்த்து சாலையோரங்களில் வீசுகிறார்கள். அங்குள்ள குரங்குகள் பிளாஸ்டிக் பைகளோடு சேர்த்து எச்சில் உணவை சாப்பிடுவதை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. பல குரங்குகள் பிளாஸ்டிக் கவர்களை உண்பதால் உயிரிழந்துள்ளன.

சாலையோரங்களில் மட்டு மின்றி அங்குள்ள பூங்காக்களும் பொதுமக்கள் விட்டுச்செல்லும் கழிவுகளால் அசிங்கமாகி வருகிறது. இதே நிலை நீடித்தால் சிறந்த சுற்றுலாத் தலம் என்னும் புகழை கொடைக்கானல் விரைவில் இழந்துவிடும் அபாயம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x