Last Updated : 11 Feb, 2023 06:18 AM

 

Published : 11 Feb 2023 06:18 AM
Last Updated : 11 Feb 2023 06:18 AM

சாலையோர சிற்பக் கூடங்களை ஒருங்கிணைத்து மாமல்லபுரத்தில் சிற்ப கிராமம் அமைக்கப்படுமா? - பாறை துகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சாலையோரங்களில் உள்ள சிற்பக் கூடங்களை வரைமுறைபடுத்தி சிற்ப கிராமம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பல்லவர் கால பாரம்பரிய கற் சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற பகுதியாகும். மேலும், கைவினை சிற்ப நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் உள்ளனர். ஆங்காங்கே சிற்ப கூடங்களை அமைத்து சிற்பத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமல்லபுரம் நகரம் மற்றும் பூஞ்சேரி, தேவனேரி பகுதிகளில் வணிக நோக்கத்துக்காக, முக்கிய சாலையோரங்களில் சிற்ப கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, சிற்பங்களுக்கான பாறைகளை சாலையோரத்தில் வைத்து செதுக்கும்போது வெளியேறும் பாறைத் துகள் மற்றும் தூசி காற்றில் பறந்து வாகன ஓட்டிகளை சிரமத்தில் ஆழ்த்துகிறது. பல நேரங்களில் எதிரே வாகனங்கள் வருவது கூட தெரியாத அளவுக்கு தூசி பறக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் புராதன நகரின் அழகை மெருகேற்றும் வகையில் ஆங்காங்கே உள்ள சிற்பக் கூடங்களை ஒருங்கிணைத்து சிற்ப கிராமம் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் கூறும்போது, சிற்பக் கூடங்களை வரைமுறைபடுத்தி, சிற்பக் கலை கிராமம் அமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய கலாச்சாரத் துறை முடிவு செய்தது.

இதற்காக, தென்னக பண்பாட்டு மையம் மூலம் 25 ஏக்கர் நிலம் கோரியது. இதையடுத்து, பூஞ்சேரியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வழங்க வருவாய்த் துறை ஆய்வு செய்தது. ஆனால், இத்திட்டம் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி சிற்ப கிராமம் அமைந்தால், இப்பகுதியில் சிற்பத் தொழில் மேம்படுவதற்கும் இளைஞர்கள் பலர் இத்தொழிலை நோக்கி வருவதற்கும் பெரிதும் பயனாக இருக்கும் என்றனர்.

இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, மாமல்லபுரம் சிற்ப கலைஞர்களுக்காக சிற்ப கிராமம் அமைக்க ஏற்கெனவே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் நிலம் ஒதுக்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x