Published : 11 Feb 2023 03:59 AM
Last Updated : 11 Feb 2023 03:59 AM

எடை குறைந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை - எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் பயணம் வெற்றி

சிறிய ரக செயற்கைக் கோள்களுக்காக, இஸ்ரோ தயாரித்த எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது.

சென்னை: இஸ்ரோ புதிதாக வடிவமைத்த சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் மூலம், புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. இதில், பிஎஸ்எல்வி மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி மூலம் 4,000 கிலோ வரையும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவும் எடை குறைவான செயற்கைக்கோள்களை வணிகரீதியாக விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் பிரத்யேக ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிய செயற்கைக் கோள்களை (500 கிலோ வரை) புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதற்காக எஸ்எஸ்எல்வி (Small Satellite Launch Vehicle-SSLV) எனும் ராக்கெட்டை இஸ்ரோ புதிதாக வடிவமைத்தது. 120 டன் எடை கொண்ட இதன் உயரம் 35 மீட்டர். மற்ற ராக்கெட்களைவிட குறைந்த அவகாசம், செலவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட் மூலம் 2 செயற்கைக் கோள்கள் கடந்த ஆக.7-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன. எதிர்பாராதவிதமாக ராக்கெட் சென்சார் செயலிழந்ததால், அத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

புதிதாக தயாரிப்பு: இதையடுத்து, புதிதாக தயாரிக்கப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட்மூலம், இஓஎஸ்-07 உள்ளிட்ட 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்-டவுன் நேற்று அதிகாலை 2.48 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் நேற்று காலை 9.18 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 15 நிமிடங்களில், புவியில் இருந்து 450 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 3 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

இத்திட்டத்தின் முதன்மை செயற்கைக் கோளான இஓஎஸ்-7 மொத்தம் 156 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டு. இது புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வு பணிகளுக்கு பயன்படும். விண்வெளியில் ஸ்பெக்ட்ரம் கண்காணிப்பு, அலைக்கற்றையில் ஈரப்பதம் குறித்த ஆய்வுகளையும் இது மேற்கொள்ளும்.

கல்விசார் செயற்கைக் கோள்: இதனுடன், அமெரிக்காவின் ஜானஸ் (10.2 கிலோ), சென்னையை சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா அமைப்பின் ஆசாதிசாட்-2 (8.8 கிலோ) ஆகிய 2 செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டன. இதில் ஆசாதிசாட்-2 எனும் கல்விசார் செயற்கைக் கோள், நாடு முழுவதிலும் 750 மாணவிகளின் கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டது. இது ரேடியோ அலைக்கற்றை குறித்த ஆய்வை அடுத்த ஓராண்டுக்கு மேற்கொள்ளும். என்சிசி 75-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில், என்சிசி பாடலை இசைக்கும்படியும் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி: 3 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் பரஸ்பரம் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பேசியபோது, ‘‘கடந்த ஆண்டு ஏவப்பட்ட எஸ்எஸ்எல்வி-டி1 ராக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுகளை விரைவாக கண்டறிந்து, அதில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதையடுத்து, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்கள் வணிகரீதியாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 மூலமாக மார்ச் 2-வது வாரத்தில் ஏவப்பட உள்ளன. மார்ச் இறுதியில் பிஎஸ்எல்வி ராக்கெட்டும் செலுத்தப்பட உள்ளது. மறுபயன்பாடு ராக்கெட், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் ஆகிய பணிகளிலும் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x