Published : 11 Feb 2023 12:16 AM
Last Updated : 11 Feb 2023 12:16 AM

‘அதிக மொழிகளை கற்பது மாணவர்களின் நினைவுத்திறனை அதிகரிக்கும்’ - ஶ்ரீவில்லிபுத்தூரில் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் பேச்சு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து ஹை ஸ்கூல் கமிட்டியின் புதிய மெட்ரிக் பள்ளி துவக்க விழா நடைபெற்றது. ஓய்வு பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலர் ராமசாமி தலைமை வகித்தார். கமிட்டி செயலாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு குழு தலைவரும் முன்னாள் இஸ்ரோ தலைவருமான விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமனுடன் இணைந்து பணியாற்றி இயற்பியலாளர் கே.எஸ்.கிருஷ்ணன் இந்த பள்ளியில் பயின்றவர். தமிழகத்தில் மேல்நிலை கல்வி அறிவு பெற்ற பெண்கள் சதவீதத்தைவிட ஸ்ரீவில்லிபுத்தூரில் 5 சதவீதம் அதிகம்.

பள்ளி பருவத்தில் அதிக மொழிகளை கற்று கொள்வதன் மூலம் மாணவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். 0 - 8 வயது வரை 85 சதவீத மூளை வளர்ச்சி அடைகிறது. அதனால் பள்ளி பருவத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மொழிகளை கற்க வேண்டும். பள்ளி பருவத்தில் முதல் 5 வருடம் தான் அடித்தளமாக அமைகிறது.

அதனால் தான் புதிய கல்வி கொள்கையில் தொடக்க மற்றும் நடுநிலை கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வியில் இடைநிற்றலை முற்றிலும் நிறுத்துவது புதிய கல்வி கொள்கையின் முக்கிய நோக்கம். மேல்நிலை வகுப்பில் கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது.

புதிய கல்வி கொள்கை பொருளாதாரம், அரசியல், சமூக, கலாச்சாரம் மற்றும் உலகளாவிய கருத்துக்களை உள்ளடங்கி உள்ளது. இதில் கடந்த 140 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் நிகழ்ந்த மாற்றங்கள், சாதனை ஆகியவை இடம் பெற்றுள்ளது. புதிய கோணத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை கொண்டு செல்வதில் புதிய கல்வி கொள்கை கவனம் செலுத்துகிறது. பள்ளி கல்வியில் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திவிட்டால் உயர்கல்வி மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.

அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை புதிய கல்வி கொள்கை உறுதி செய்கிறது. இதில் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதிய கல்வி கொள்கை வடிமைப்பில் உறுதுணையாக இருந்தார்" இவ்வாறு கூறினார்.

மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளி) பாண்டிச்செல்வி, இந்து ஹை ஸ்கூல் கமிட்டி தலைவர் மலையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x