Published : 17 May 2017 07:17 AM
Last Updated : 17 May 2017 07:17 AM

தமிழக வரலாற்றில் முதல்முறை: திருத்தணியில் அதிகபட்சமாக 114 டிகிரி வெயில்

தமிழக வரலாற்றில் முதல்முறை யாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் நேற்று பதிவானது.

தமிழகத்தில் கோடை காலத்தின் தொடக்கத்தில் இருந்தே மிகக் கடுமையான வெயில் நிலவி வந்தது. மே மாத தொடக்கத்தில் மேற்கு திசையில் வறண்ட காற்று வீசியதால் வெப்பம் சில நாட்களுக்கு அதிகரித்தது. இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

மீண்டும் மேற்கு காற்று

பொதுவாக காலை நேரங்களில் கடலில் இருந்து குளிர்ந்த காற்று நிலப்பகுதியை நோக்கி வீசும். அந்த காற்று சரியான நேரத்தில் வீசினால் வெப்பம் சற்று குறைந்து காணப்படும். தாமதமாக கடல்காற்று வீசினால் வெப்பம் அதிகரிக்கும். தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்தை நோக்கி வீசுவதாலும் மேற்கு திசையை நோக்கி தரைக்காற்று வீசுவதாலும் கடற்காற்று வர தாமதமாகிறது. இதனால் தற்போது வெப்பம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று திருத்தணி யில் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. அதேபோல வேலூரில் 109 டிகிரி, திருச்சியில் 108 டிகிரி, சென்னை, கரூரில் 107 டிகிரி, பாளையங்கோட்டையில் 106 டிகிரி, புதுச்சேரி, பரங்கிப்பேட்டையில் 105 டிகிரி, மதுரை, சேலத்தில் 104 டிகிரி, கடலூர், தருமபுரியில் 103 டிகிரி, காரைக்காலில் 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

இதுவரை இல்லாத வெயில்

சென்னை வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து மழை மற்றும் வெயில் நிலவரங்களைப் பதிவு செய்து வைத்துள்ளது. சுமார் 100 ஆண்டு களுக்கு மேலான தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பார்த்தால் இதுவரை தமிழகத்தில் 113 டிகிரி வெயில் பதிவானதே அதிக பட்சமாகும். கடந்த 2003-ம் ஆண்டு சென்னை மற்றும் வேலூரில் இந்தளவுக்கு வெயில் பதிவாகி யிருந்தது. திருத்தணியில் நேற்று பதிவான 114 டிகிரி வெயிலே தமிழகத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெயிலாகும். திருத்தணி மட்டுமல் லாமல் தமிழகம் முழுவதும் பதிவாகி வரும் வரலாறு காணாத வெயிலின் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந் துள்ளனர்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, “கடல்காற்று வீசுவது தாமதம் ஆவதாலும், தரைக்காற்று வீசுவதாலும் வெயில் அதிகரித்துள் ளது. இந்த நிலை மேலும் 2 அல்லது 3 தினங்களுக்கு நீடிக்கும். திருத்தணியில் பதிவான வெயில், நம்மிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பதிவானதிலேயே அதிகமாகும்” என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆங்காங்கே இன்று மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அனல் காற்று வீசும் என்று வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x