Published : 04 Feb 2023 06:51 AM
Last Updated : 04 Feb 2023 06:51 AM

இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு அதிக முதலீடு தேவை: புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கி ராமகிருஷ்ணன் பேச்சு

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணனின் ‘ஜீன் மிஷின் ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, சென்னை, ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிஸம் வளாகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. நூலை ‘இந்து' என்.ராம் வெளியிட மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் பெற்றுக் கொண்டார். உடன் நூலின் மொழிபெயர்ப்பாளர் சற்குணம் ஸ்டீவன், எழுத்தாளர் ஜி.குப்புசாமி, நூலாசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் இருந்தனர். படம்: ம.பிரபு

சென்னை: இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கு அதிகமுதலீடுகள் தேவை எனப் புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கிராமகிருஷ்ணனின் ‘ஜீன் மிஷின் ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, சென்னை, ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிஸம் வளாகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இந்நூலை ‘இந்து' என்.ராம் வெளியிட மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நூலின் மொழிபெயர்ப்பாளர் சற்குணம் ஸ்டீவன், எழுத்தாளர் ஜி.குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகத்தைச் சேர்ந்த கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.ராம் வரவேற்றுப் பேசினார். இதையடுத்து நூலாசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் பேசியதாவது:

மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல. பருவநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மூலமாகத்தான் நமக்குச் சாதகமான சூழலை அமைத்துக்கொள்ள முடியும்.

அதேநேரத்தில் குறிப்பட்ட சில தனியார் நிறுவனங்கள் மட்டும் அந்த பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய சூழ்நிலைக்குச் சென்றுவிடாமலும் கவனமாகச் செயல்பட வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து நேரு பிரதமராகப் பதவி ஏற்ற பிறகும் அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துபல்வேறு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதனால் அந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. அதன்பிறகு அந்த கட்டமைப்புகளை சரியாகப் பராமரிக்காததால் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரு தேக்க நிலை உருவாகத் தொடங்கியது.

இந்தியாவில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் அறிவியல் ஆராய்ச்சியில் முனைப்புக் காட்டுவதில்லை. இதனைச் சரி செய்ய மத்திய அரசு அறிவியல் ஆராய்ச்சிக்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்றார்.

எழுத்தாளர் ஜி.குப்புசாமி பேசுகையில், ``இதுவரை நோபல் பரிசு பெற்றவர்கள் எழுதிய நூல் எதுவும் தமிழில் வாசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்கள் கூட எளிதாகப் புரியும் வகையில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது'' என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x