Published : 04 Feb 2023 04:36 AM
Last Updated : 04 Feb 2023 04:36 AM

பிபிசி ஆவணபட தடைக்கு எதிரான வழக்கு - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: கடந்த 2002-ம் குஜராத் கலரவரங்கள் பற்றி ‘இந்தியா: தி மோடி குவெஸ்டீன்’ என்ற பெயரில் பிபிசி ஆவணப்படம் தயாரித்தது. இந்த படம் குறித்த வீடியோ லிங்குகள் யூ ட்யூப் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் பகிரப்பட்டன. இவற்றை தடை செய்யும்படி மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஒரு மனுவை எம்.பி. மகுவா மொய்த்ரா, பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ளனர். மற்றொரு மனுவை வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்களில், ‘‘பிபிசி ஆவணப்படத்தில் உண்மை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க இவற்றை பயன்படுத்த முடியும். எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல்களை தடை செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தின் லிங்க்குகளை நீக்க எடுக்கப்பட்ட முடிவில் அசல் ஆவணத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். பதில் மனுவை 3 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x