

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் புற்றுநோய் தினத்தையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு சீருடை வழங்கும் நிகழ்ச்சி உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கி பேசியது: ''நிறைய நோய்கள் வரும்போது அதனை குணப்படுத்தி விடுகிறோம். ஆனால், ஒருசில நோய்கள் மிகவும் மோசமானவை. அப்படிப்பட்ட வகையை சார்ந்ததுதான் புற்றுநோய். புற்றுநோயாளிகள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று கேள்விப்படும்போதே நமக்கு சிரமமாக இருக்கும். புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்பது நம்முடைய எண்ணம். இதற்கான மருந்துகளை கண்டுபிடித்து வருகிறார்கள்.
ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம். நோய் முற்றிவிட்டால் குணப்படுத்த முடியாத நிலை உள்ளது. புதுச்சேரியை சுத்தமாக வைத்துக்கொள்ள நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். தூய்மைப் பணி ஊழியர்கள் நினைத்தால் புதுச்சேரியை சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும். நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள் சரியாக தூய்மைப் பணியை மேற்கொள்வதில்லை. அதனால், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் தூய்மைப் பணி சரியாக நடப்பதில்லை. பணி சரியாக நடந்தால் எங்கும் குப்பை இருக்காது. நம்மால் மக்களுக்கு சங்கடங்கள் இருக்கக்கூடாது. அந்த வகையில் தூய்மைப் பணி ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான பணம் கொடுக்கிறோம். அவர்கள் தான் சரியாக தூய்மைப் பணி ஊழியர்களுக்கு ஊதியம் தர வேண்டும். புதுச்சேரி எந்த நேரமும் சுத்தமாக இருக்கிறது என்று சொல்லும் வகையில் தூய்மைப் பணி ஊழியர்களின் பணி இருக்க வேண்டும்.
இதை ஒப்பந்ததாரர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். தூய்மைப் பணிக்கு மக்களின் வரி பணத்தை கொடுக்கிறோம். யாரும் இலவசமாக வேலை செய்யவில்லை. சுத்தமாக இருந்தால் நோய் இல்லாமல் இருக்க முடியும். தூய்மைப் பணி ஊழியர்கள் நன்றாக பணியாற்றினால், மற்றவர்களும் உங்களை பாராட்டுவார்கள். மற்ற மாநிலங்களை காட்டியிலும் மருத்துவ துறையில் முதலிடத்தில் இருக்கிறோம். மருத்துவத் துறையில் இன்னும் சிறப்பான முறையில் வர வேண்டும்.
சிறப்பு மருத்துவ வசதி வேண்டும், நல்ல மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்று நிதியை ஒதுக்கி கொடுத்து வருகிறோம். எதிர்காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் நோய் குறைவு என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல், அனைத்து மருத்துவமனைகளிலும் எல்லா மருந்துகளும் கிடைப்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காகவும் நிதியை ஒதுக்கி கொடுத்து வருகிறோம்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிவசங்கர் எம்எல்ஏ, சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், மாவட்ட ஆட்சியரும், உள்ளாட்சி துறை செயலருமான வல்லவன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.