Published : 01 Feb 2023 04:00 AM
Last Updated : 01 Feb 2023 04:00 AM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பாக அதிமுகவிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என அக்கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சென்னையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, மாநில துணைத் தலைவர்கள் நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் நாராயணன் திருப்பதி கூறியதாவது: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் முதல் 471 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது நடைபயணம் எவ்வாறு அமைய வேண்டும். மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள் இதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.
நடைபயணம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பெரும்பாலான பாஜக நிர்வாகிகள் விரும்புகின்றனர். எந்த அரசியல் கட்சியினரும் தேர்தலில் போட்டியிடத்தான் விரும்புவார்கள்.
அதே நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டுதான் முடிவு எடுக்கப்படும். அதிமுகவிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலில் இன்னும் 2 நாட்களில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும். பாஜக ஒரு தேசிய கட்சி. எனவே, தேர்தல்களில் பொறுத்தவரை எங்களுடைய கருத்துகளை தெரிவித்து, கட்சியின் தேசிய தலைமையுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த இடைத்தேர்தலில் திமுகதோற்கடிக்கப்பட வேண்டும்.அங்கு பணப்பட்டுவாடா பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநிலதேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ஆலோசனை கூட்டத்தின்போது, பெரும்பாலான நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால், இந்த தேர்தலில் நாம் களம் இறங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT