Last Updated : 31 Jan, 2023 04:47 PM

 

Published : 31 Jan 2023 04:47 PM
Last Updated : 31 Jan 2023 04:47 PM

கடைகளில் குட்கா, பான் மசாலாவை விற்காதீர்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு இன்று வெள்ளை அங்கி அணிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். | படம்: ஜெ.மனோகரன்

கோவை: குட்கா, பான்மசாலா போன்றவற்றுக்கு தடை விதிக்க தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 'நம்மை காக்கும் 48’ திட்டத்துக்கு தேவையான ரூ.56 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கும் நிகழ்வு, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வு ஆகியவை இன்று (ஜன.31) நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "நீதிமன்றத்தால் விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. போதைப் பொருட்களால் தமிழகத்தில் அறவே இருக்கக் கூடாது என முதல்வர் உறுதியாக இருக்கிறார்.

மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் குட்கா, பான் மசாலா போன்றவற்றை கடைகளில் விற்பனை செய்ய வேண்டாம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோருக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன். சட்டபூர்வமாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூறியுள்ளனர். தேவைப்பட்டால் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளவோ, புதிய சட்டம் இயற்றவோ நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மொத்தம் 72 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இங்கு ஒரு மருத்துவர், மருந்தாளுநர், உதவி சுகாதார ஆய்வாளர், உதவியாளர் ஆகியோர் இருப்பர். அறிவிக்கப்பட்ட இடங்களில் 50 நலவாழ்வு மையங்களின் கட்டுமான பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்த மாத இறுதிக்குள் தமிழகம் முழுவதும் இதுபோன்ற அமைக்கப்பட்ட 500 நலவாழ்வு மையங்களை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்க உள்ளார். 2025-க்குள் தமிழ்நாட்டை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சத்தான உணவுப்பொருட்களை சுமார் 100 தன்னார்வ அமைப்பினர் மூலம் வழங்கி வருகிறோம்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குநர் (பொறுப்பு) சாந்திமலர், இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரன், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா உள்ளிட்டார் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x