Published : 31 Jul 2014 11:04 AM
Last Updated : 31 Jul 2014 11:04 AM

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களை ஊக்குவிக்க மாநில இளைஞர் விருது: முதல்வர் அறிவிப்பு

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 50,000/- ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர்: "

1. திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலா 80 லட்சம் ரூபாய் மற்றும் பிற மாவட்ட வளாகங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 80 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

2. தற்போது 23 மாவட்டங்களில் 25 நீச்சல் குளங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பான்மையான நீச்சல் குளங்கள் 15-லிருந்து 20 ஆண்டுகள் வரை பழமையானவை. தண்ணீரை சரி சமமாக பராமரித்தல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பேணுதல் ஆகியவை நீச்சல் குளங்களை பராமரித்தலின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். எனவே இந்த நீச்சல் குளங்கள் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்து, புதுப்பித்து பராமரிக்கப்படும்.

3. நீச்சல் குளத்திலுள்ள நீருக்கு ஓசோன் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நீரின் தரம் அதிகமாக உயர்த்தப்படுவதுடன், அதற்காக ஆகும் செலவுகளையும் காலப் போக்கில் மிச்சப்படுத்தலாம் என்பதன் அடிப்படையில், வேளச்சேரி நீச்சல் குள வளாகம், செனாய் நகர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி தலா 15 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் செலவில் ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்படும்.

4. சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும். 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 50,000/- ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

5. 2005 ஆம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் உள்ள மேலக்கோட்டையூரில் 125 ஏக்கர் பரப்பிலான பரந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், மாணாக்கர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் பயன்பாட்டிற்காக உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில், 18 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் ஆகியவை அமைக்கப்படும். இது மட்டுமல்லாமல், பரந்து விரிந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நிர்வாக கட்டடம், விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களுக்கு மாணாக்கரும், பணியாளர்களும் சென்று வர வசதியாக 2 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை அமைத்துத் தரப்படும்.

6. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மாற்றத்திற்கான முக்கிய காரணியாகவும், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருமித்த அணுகுமுறையை வழங்கும் வகையிலும், தேசிய வளர்ச்சியில் அவர்கள் முழுமையாக பங்காற்றும் வகையிலும், மாநிலத்திற்கென ஓர் இளைஞர் கொள்கை வகுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், இளைய சமுதாயத்தினரின் உடல் நலமும், மன நலமும் மேலும் உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x