Published : 23 Jan 2023 06:00 AM
Last Updated : 23 Jan 2023 06:00 AM

குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபையில் விவாதிக்க வேண்டியது என்ன? - தமிழக அரசு விரிவான வழிகாட்டுதல் வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் விவாதிக்கப்பட வேண்டிய கருத்துகள் குறித்த அறிவுறுத்தல்களை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கிராம ஊராட்சியில் கடந்த ஆண்டு ஏப்.1 முதல் டிச.31 வரை பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவு அறிக்கை, கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஒட்டுமொத்த தூய்மைப் பணி, அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீர் விநியோகம், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை சுத்தம் செய்தல், டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியை தடுத்தல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரத்தை பகிர வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்ட மனித சக்தி நாட்கள், மேற்கொள்ளப்பட்ட செலவு ஆகியவற்றுக்கும் ஒப்புதல் பெற வேண்டும்.

தற்போது உள்ள பணியின் முன்னேற்றம், செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகள், அவற்றின் முன்னேற்றம், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதித்தல், திடக்கழிவு மேலாண்மை, அனைத்து வீடுகளிலும் கழிப்பறையை பயன்படுத்த வலியுறுத்துதல், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலையை தக்கவைத்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும்.

பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2021-22-ல் 2,89,887 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் தொடர்பாகவும் கிராமசபையில் விவாதிக்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு திட்டக் கணக்கெடுப்பு, அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், பிரதமரின் சாலை திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்க வேண்டிய பணிகளின் பட்டியல் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.

மேலும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து விவாதிப்பதுடன்,6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிப்பது தொடர்பாகவும் விவாதித்து, ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்வாறு ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x