Published : 23 Jan 2023 02:21 AM
Last Updated : 23 Jan 2023 02:21 AM

சர்வதேச கிரிக்கெட்டில் கெத்து காட்டிய செம வெயிட்டான மூன்று வீரர்கள்

காலிஸ், இன்சமாம் மற்றும் ரைடர்

எதிர்வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ரஞ்சிக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது விமர்சனமாக முன்வைக்கப்பட்டது. அவரது உடல் எடைதான் வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரருக்கு உடல் எடை காரணமாக அணியில் வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா என்பது இங்கு கேள்வியாக எழுகிறது. இந்த சூழலில் அதற்கான விடையை கிரிக்கெட் விளையாட்டின் கடந்த கால வரலாறு பதில் அளிக்கிறது.

அதிக உடல் எடை கொண்ட வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னே அதற்கு சிறந்த உதாரணம். சிறந்த லெக் ஸ்பின்னராக அவர் அறியப்படுகிறார். அதே போல இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன் ரணதுங்காவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். இவர்கள் வரிசையில் பின்வரும் மூவரும் நிச்சயம் இருப்பார்கள்.

இன்சமாம்-உல்-ஹக்: பாகிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டுக்கு அடையாளம் காட்டிய சிறந்த வீரர்களில் ஒருவர் இன்சமாம். அதிக உடல் எடை காரணமாக இவர் கேலிக்கும் ஆளாகியுள்ளார். இருந்தாலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெயிட்டான வீரர். 1992 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது முதலே பாகிஸ்தான் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார்.

2003 - 07 வரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டவர். 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,830 ரன்கள் மற்றும் 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,739 ரன்கள் குவித்துள்ளார்.

காலிஸ்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர். இவரது பேட்டிங் மற்றும் பவுலிங் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஸ்லிப் பீல்டராக அபாரமான கேட்ச்களை பிடித்தவர். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து 25,534 ரன்கள் சேர்த்துள்ளார். பவுலராக 577 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 1995 முதல் 2014 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர்.

ஜெஸ்ஸி ரைடர்: நியூஸிலாந்து அணிக்காக இவர் விளையாடியது என்னவோ குறுகிய காலம்தான். இவரை இடது கையில் பேட் செய்யும் இன்சமாம் என்று சொல்வது உண்டு. 2014-ல் ஒருநாள் கிரிக்கெட்டில் 46 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். 2008 வாக்கில் இவர் 100 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டிருந்தார். அதனால் நியூஸிலாந்து அணியில் விளையாடும் வாய்ப்பு இல்லை என சொல்லப்பட்டது. இருந்த போதும் இன்னிங்ஸின் தொடக்கத்தில் இவர் விரைவாக ரன் சேர்க்கும் வல்லமை கொண்டவர் என்பதற்காக அணியில் சேர்க்கப்பட்டார். 88 சர்வதேச போட்டிகளில் விளையாடி 3,088 ரன்கள் குவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x