Published : 19 Jan 2023 07:14 AM
Last Updated : 19 Jan 2023 07:14 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’யின் ‘ஆனந்த ஜோதி’ சார்பில் உலக நன்மைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் கடந்த டிச.20-ம் தேதி முதல் செவ்வாய்தோறும் விளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர், நீடாமங்கலம் பூவனூர் சாமுண்டீஸ்வரி (சதுரங்கவல்லப நாதர்), பட்டுக்கோட்டை அடுத்த பாலத்தளி துர்க்கையம்மன், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி–பக்தவத்சலேஸ்வரர் ஆகிய கோயில்களில் விளக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிலையில், 5-வதாக, சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மேல்மருவத்தூர் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்பாள் சமேத ஆட்சீஸ்வரர் கோயிலில் கடந்த 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை விளக்கு பூஜை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், சிலாவட்டம், செங்கல்பட்டு, மதுராந்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர குருக்கள் தலைமையேற்று நடத்த, லோகேஷ் குருக்கள், கருணாநிதி குருக்கள் உள்ளிட்டோரும் விளக்கு பூஜையை நடத்தினர். பதிகங்கள், ‘போற்றி’ பாடல்களை ஓதுவார் கயப்பாக்கம் நடராஜன் பாடினார். பூஜை முடிந்ததும், பல்லக்கில் உற்சவ மூர்த்தியான அம்பாளின் பிரகார உலா நடந்தது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நவக்கிரக வழிபாட்டிலும் பெண்கள் கலந்துகொண்டனர்.
பூஜைக்கு தேவையான பொருட்களை முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தர்மன் வழங்கினார். கணேசன், சுவாதி உள்ளிட்டோரும் உதவிகள் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், ‘இந்து தமிழ் திசை’ சர்க்குலேஷன் பிரிவு ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்தனர்.
முன்னதாக, விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களும் கோயிலுக்கு வந்த பக்தர்களும் தங்கள் பிரார்த்தனைகளை ‘கடவுளுக்கு ஒரு கடிதம்’ என்ற பெயரில் பிரார்த்தனைச் சீட்டில் எழுதினர். அவை அனைத்தும் அம்பாளின் திருப்பாதங்களில் வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.
விளக்கு பூஜை நடத்தியதற்காக, அச்சிறுப்பாக்கம் மக்கள் சார்பில், கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர குருக்கள் ‘இந்து தமிழ் திசை’க்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக வந்திருக்கும் ராஜாம்பாள், தனது பிறந்தநாளில் கிடைத்த பேறு இது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT