Published : 19 Jan 2023 04:25 AM
Last Updated : 19 Jan 2023 04:25 AM
மதுரை: மதுரை மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் (அதிமுக) சோலைராஜா, நேற்று முன்தினம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த சம்பவம், அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவினரும், திமுகவினரும் நெருங்கிய உறவினர்களாக இருந்தால் கூட ஒருவர் வீட்டு நிகழ்ச்சிக்கு மற்றவர் போவதில்லை. ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பின்பு இரு கட்சிகளின் நிர்வாகிகளும் நெருக்கம் காட்ட தொடங்கி விட்டனர். அதேநேரம் மேடையில் மட்டும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி பேசுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க வந்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸடாலினை, மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் (அதிமுக) சோலைராஜா சந்திப்புப் பேசிய சம்பவம் அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, மாநகராட்சி கூட்டத்தில் சோலைராஜா நேரடியாக திமுகவை கடுமையாக எதிர்த்து வந்தாலும், மறைமுகமாக அவர்களுடன் நெருக்கம் பாராட்டுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை அவர் மறுத்து வரும் நிலையில் திடீரென உதயநிதியை சந்தித்ததால், திமுகவில் சேர உள்ளதாக தகவல் பரவியது.
இதுகுறித்து சோலைராஜா கூறியதாவது: நான் தமிழ்நாடு கபடி கழகத்தின் மாநில தலைவராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சீனியர் துணைத் தலைவராகவும் உள்ளேன். விளையாட்டுத் துறைகளில் இருந்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். உலக கோப்பை கபடி போட்டியை நடத்த வேண்டும் என நான் இருக்கும் கபடி கழகம் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.
உலக கோப்பை கடடி போட்டியை தமிழகத்தில் நடத்த உள்ளதாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத் தொகையை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தியுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கபடி கழக மாநிலத் தலைவர் என்ற முறையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து நன்றி தெரவித்தேன்.
அவரிடம் உலக கோப்பை கபடி போட்டியை மதுரையில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். அரசியல் வேறு, விளையாட்டு வேறு. நான் எங்கள் கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்துச் சென்று சந்திக்கவில்லை. கபடி கழக நிர்வாகிகளுடன் சென்றுதான் சந்தித்தோம்.
இந்த சந்திப்பு தொடர்பாக எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்லூர் கே.ராஜூவிடம் தெரிவித்துவிட்டேன். சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் ஒரு போதும் திமுகவில் சேர மாட்டேன். அதிமுகவில்தான் நீடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT