Published : 04 Dec 2016 11:02 AM
Last Updated : 04 Dec 2016 11:02 AM

துறையூர் அருகே 19 பேரை பலிகொண்ட வெடி மருந்து ஆலை உரிமம் ரத்து

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 19 பேர் பலியான வெடி விபத்து நடைபெற்ற சம்பவத்தில், இடைக்கால நடவடிக்கையாக வெடி பொருள் தயாரிப்பு நிறுவனத் தின் வெடி மருந்து தயாரிப்பதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

த.முருங்கப்பட்டியில் இயங்கி வந்த வெற்றிவேல் வெடி மருந்து தயாரிப்பு ஆலையின் யூனிட் 2-ல் டிசம்பர் 1-ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இந்நிலையில், சென்னை தெற்கு வட்ட வெடி மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் அசோக்குமார் யாதவ் சம்பவ தினத்தன்று உத்தரவிட்டதாக நேற்று வெளியான செய்திக்குறிப்பு:

விபத்து ஏற்பட்ட முருங்கப்பட்டி வெற்றிவேல் வெடி மருந்து தயாரிப்பு ஆலை மீது இடைக்கால நடவடிக்கையாக அதன் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் வரை மேற்கொண்டு தயாரிப்பு உட்பட எவ்வித பணிகளையும் ஆலையில் மேற்கொள்ளக் கூடாது. வெடி மருந்து தயாரிப்பதற்கான உரிமத்தை நிறுத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ ஏன் கூடாது என்பதற்கான விளக்கத்தை 10 நாட்களில் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடி மருந்து ஆலை மீது சம்பவம் ஏற்பட்ட அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அதை அப்போதே அறிவித்திருந்தால் மக்களின் போராட்டம் ஓரளவு குறைந்திருக்கும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரி நியமனம்

வெடி விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தையும், அதன் சூழ்நிலை யையும் கண்டறியும் பொருட்டு, கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க.தர்ப்பகராஜை விசாரணை அதிகாரியாக நியமித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட நிர்வாக நடுவருமான கே.எஸ்.பழனிசாமி நேற்று உத்தரவிட்டார்.

வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் திட்ட இயக்குநர் பிரகாசம், துணை மேலாளர் (உற்பத்தி) ராஜகோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x