Published : 18 Jan 2023 05:18 AM
Last Updated : 18 Jan 2023 05:18 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்: 26 காளைகளை அடக்கிய வீரருக்கு கார்

ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இதில் அதிகபட்சமாக 26 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார், நாட்டு இனப் பசு பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் தை முதல் நாளில் அவனியாபுரத்திலும், 2-ம் நாளில் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. 3-ம் நாளான நேற்று உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

இப்போட்டியை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை 8 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும், வாடிவாசலில் முதலில் உள்ளூர் காளையான முத்தாலம்மன் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு, பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப் பாய்ந்தும், துள்ளிக்குதித்தும் மாடுபிடி வீரர்களை மிரட்டின. வீரர்கள் அசாத்திய துணிச்சலுடன் காளைகளின் திமில்களைப் பிடித்து அடக்கி, தங்கள் வீரத்தை பறைசாற்றினர்.

மிகுந்த ஆர்வத்துடன் போட்டியை ரசித்துப் பார்த்த அமைச்சர் உதயநிதி காலை 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கிய மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்குவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கி உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த ராஜ்குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது குறித்தும் முதல்வர் முடிவு செய்வார்’’ என்றார்.

போட்டியின்போது, ஒருசில காளைகளை பிடிக்க ஒருவர்கூட அருகே செல்லவில்லை. அந்த அளவுக்கு அந்த காளைகள், வாடிவாசல் முன்பு நின்று விளையாடின. சில காளைகள் புழுதியை கிளறியபடி, கொம்புகளை காட்டி வீரர்களை மிரட்டின. சில வீரர்கள் தடுப்புகளின் மீது ஏறி பாதுகாப்பாக நின்று கொண்டனர். சிலர் துணிச்சலுடன் முன்சென்று அடக்க முயன்றனர். ஆனால், அந்தக் காளைகள் அவர்களை தூக்கி வீசி அந்தரத்தில் பறக்கவிட்டன. சிறந்த சில காளைகளை வீரர்கள் அடக்கி சிறப்பு பரிசுகளை அள்ளினர்.

இப்போட்டியில் மொத்தம் 825 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 425 வீரர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் அதிகபட்சமாக 26 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். இவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் நாட்டு இனப் பசு பரிசாக வழங்கப்பட்டது.

20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் ஏனாதியை சேர்ந்த அஜய்க்கு 2-வது பரிசாக பைக் வழங்கப்பட்டது. அலங்காநல்லூரை சார்ந்த ரஞ்சித் 12 காளைகளை அடக்கி 3-வது பரிசாக பைக்கை பெற்றார்.

சிறந்த காளைக்கு பரிசு

சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி தமிழ்ச்செல்வனின் காளைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார், நாட்டு இனப் பசு பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷின் காளை, 3-வது இடம் பிடித்த உசிலம்பட்டி அடுத்த வெள்ளம்பழம்பட்டி பட்டாணி ராஜாவின் காளைக்கு பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளுக்கு தங்கக் காசுகள், 5-க்கும் மேற்பட்ட நிச்சய பரிசுகள், வெற்றிபெற்ற காளைகள், வீரர்களுக்கு எல்இடி டிவி, மிக்ஸி, கிரைண்டர், பீரோ, கட்டில், மெத்தை, சேர், அண்டா என பல கோடிரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரின் உருவம் பொறித்த தங்க மோதிரங்களை அமைச்சர் பி.மூர்த்தி பரிசாக வழங்கினார்.

இப்போட்டியில் 23 காளை உரிமையாளர்கள், 13 மாடுபிடி வீரர்கள், 2 போலீஸார் உட்பட 49 பேர் காயமடைந்தனர்.

தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்மேற்பார்வையில் டிஐஜி பொன்னி,எஸ்.பி.க்கள் சிவபிரசாத் (மதுரை),பாஸ்கரன் (திண்டுக்கல்), டோங்ரேபிரவின் உமேஷ் (தேனி) ஆகியோர்தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊர் எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைத்து, பரிசோதனைக்கு பிறகேகாளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

வெளிநாட்டினர் ஆர்வம்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கேலரியில் அமர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மிகுந்த வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

தமிழகம் முழுவதிலும் இருந்து அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் வளர்க்கும் பிரபலமான காளைகளும், இதுவரை தோல்வியையே சந்திக்காத காளைகளும் பங்கேற்றதால், பார்வையாளர்களுக்கு இப்போட்டி மிகவும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x