Published : 16 Jan 2023 01:29 PM
Last Updated : 16 Jan 2023 01:29 PM

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: முதல்வர் வழங்கினார் 

விருதுகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழறிஞர்களுக்கு வழங்கினார்.

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்ப் புலவர்களையும், தமிழறிஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், கருணாநிதி தைத்திங்கள் இரண்டாம் நாளை திருவள்ளுவர் திருநாள் எனக் கடைப்பிடிக்க ஆணையிட்டார். மேலும், கருணாநிதியால் சென்னையில் வள்ளுவர் கோட்டம் உருவாக்கப்பட்டதோடு, கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, திறந்தும் வைக்கப்பட்டது. கருணாநிதியின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும், தமிழறிஞர்களையும், தமிழ்ச் சான்றோர்களையும் சிறப்பிக்கும் விதமாக, மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள், அரசின் சார்பில் ஆண்டுதோறும் 'மகாகவி நாளாகக்' கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தியது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி விருது” என்ற புதிய விருது தோற்றுவிப்பு, ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக கனவு இல்லம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை இரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு, 2022ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை சி.நா.மீ. உபயதுல்லாவிற்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருதினை நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தாவுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா. மதிவாணனுக்கும் வழங்கினார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருதினை கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2022ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதினை எஸ்.வி. ராஜதுரைக்கும், முதல்வர் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக தலா 5 இலட்சம் ரூபாய், தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x