Published : 14 Jan 2023 08:43 PM
Last Updated : 14 Jan 2023 08:43 PM

ஆளுநரை தரக்குறைவாகப் பேசிய விவகாரம் - திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இடைநீக்கம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவாகப் பேசியதாக சொல்லப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி இந்தப் புகாரை அளித்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பும் புகார் மனு அளித்திருந்தது. இந்தநிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x