Published : 10 Jan 2023 04:10 AM
Last Updated : 10 Jan 2023 04:10 AM
சேலம்: ஊதிய நிலுவை, பிஎஃப் பிடித்தம் செலுத்தாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உடல் முழுவதும் கரியை பூசிக்கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருபவர் குணாளன். இவர் நேற்று உடல் முழுவதும் கரியை பூசிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், அவரை தடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில் சுமார் 2,500 தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 800 பேர் நிரந்தரமாகவும் மீதமுள்ளவர்கள் தற்காலிகமாகவும் பணிபுரிந்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. சிக்கன நாணய சங்கத்தில் கூட்டு வட்டி திணிக்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை உரியவரின் பெயரில் செலுத்தப்படுவதில்லை.
சேலம் மாநகரில் தொற்றுநோய் பரவாமல் பாதுகாத்து வருகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை. மாநகராட்சியின் குத்தகைதாரர், ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. எங்கள் குறைகள் குறித்து பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடமும், ஆட்சியரிடமும் புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT