Published : 09 Jan 2023 05:32 PM
Last Updated : 09 Jan 2023 05:32 PM

புதுமைப் பெண் திட்டம் | மாணவிகளின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் உயர வாய்ப்பு: ஆளுநர் உரையில் தகவல் 

புதுமைப் பெண் திட்டம்

சென்னை: "புதுமைப் பெண்" திட்டத்தில் பயன் பெறும் மாணவிகளின் எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சத்திற்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் ஆளுநர் உரையில், "தரமான உயர் கல்வியை வழங்கி, நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஆற்றல்மிக்க மனிதவளத்தை உருவாக்க இந்த அரசு முனைந்துள்ளது. அந்த வகையில், பெண்களின் உயர்கல்விக்கு வித்திடவே ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டம்’ என்ற முன்னோடித் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.

நடப்புக் கல்வி ஆண்டில், இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்வி பயிலும் 1,28,780 மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிதியாண்டின் இறுதிக்குள், பயன்பெறும் மாணவியரின் எண்ணிக்கை 2 இலட்சத்திற்கும் மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்புக் கல்வியாண்டில், கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவியரின் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தொழில்துறையின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பெண்களுக்கு ஏற்ற பட்டயப் படிப்புகளையும் அரசு தொடங்கியுள்ளது. கட்டடம், இயந்திரப் பொறியியல் போன்றவற்றில் பட்டயப் படிப்புகள் நடப்புக் கல்வியாண்டில் தமிழ்வழியில் கற்பிக்கப்படுகின்றன.

நாட்டிலேயே முதன்முறையாக, பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்த அரசு வெற்றிகரமாக சென்னையில் நடத்தியது. 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, ஏறத்தாழ 1,800 விளையாட்டு வீரர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியை மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இப்போட்டிக்காக, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய ஏற்பாடுகளை அனைவரும் வெகுவாகப் போற்றினர். உலகே வியக்கும் வகையில், மிகக் குறுகிய காலத்தில், இந்த பன்னாட்டுப் போட்டியைச் சிறப்பாக நடத்திக் காட்டிய தமிழ்நாடு அரசை நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

மாநிலம் முழுவதும் விளையாட்டுத் திறனை ஊக்குவித்திட ‘முதலமைச்சர் கோப்பைக்கான’ போட்டிகளை அரசு அறிவித்துள்ளது. இப்போட்டிகளில், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பணியாளர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில், ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், தடகளம், கால்பந்து, கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாநிலமெங்கும் நடத்தப்பட உள்ளன.

உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் திறன் உச்சிமாநாடு, ‘UMAGINE’ முதன்முறையாக சென்னையில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்பத் துறை முன்னோடிகள் ஆகியோரை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து தொழில்நுட்பத் துறைக்கு புதிய உத்வேகத்தை இம்மாநாடு ஏற்படுத்தும்.

1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், பல்வேறு காலங்களில் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு, நாட்டிற்கே முன்மாதிரியாக இன்று திகழ்கிறது. ஏழை எளிய மாணவர்கள் அதிக அளவில் பள்ளிகளில் சேர்வதற்கும், தொடர்ந்து பயில்வதற்கும் இத்திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது.

இதன் அடுத்த பரிணாமமாக, கல்வி கற்கும் கனவுகள் பல சுமந்துகொண்டு, வெறும் வயிற்றுடன் காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் கல்வியில் கவனம் செலுத்த இயலாத நிலையைக் களைய, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, 1.14 இலட்சம் மாணவர்கள் தினமும் பயன்பெறுகின்றனர். மதிய உணவுத் திட்டம் போன்றே இத்திட்டமும் நமது நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x