Published : 09 Jan 2023 09:43 AM
Last Updated : 09 Jan 2023 09:43 AM

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்: ரேஷன் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் | படம்: ம.பிரபு.

சென்னை: தமிழகத்தில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விநியோகித்து திட்டத்தை தொடங்கிவைத்தார். இதேபோல் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டமும் இன்று தொடங்குகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்: தமிழகம் முழுவதும் டோக்கன் விநியோகம் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரியது என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் தொடங்கிவைத்த பின்னர், அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் தொடங்க வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி, ரேஷன் கடைகளுக்கு வரும் 13-ம் தேதி பணி நாள் என்றும், அதற்குப் பதில் வரும் 27-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அத்துடன், பொங்கல் தொகுப்புக்கான பொருட்கள் தரமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்ற பயனாளிகள் | படம்:ம.பிரபு.

இரண்டு ரூ.500 நோட்டுகளே வழங்க வேண்டும்: * பொங்கல் பரிசுத் தொகை ரூ 1000த்தை சில்லறை மாற்றி வழங்கக் கூடாது. இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்க வேண்டும். பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது. அனைவரும் பார்க்கும்படி கையிலேயே வழங்க வேண்டும்.

* பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகிக்க வேண்டும்

* மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நோயாளிகள், நடமாட முடியாத முதியவர்களுக்கு பதில் வேறு நபர்கள் வந்தால் பரிசுத் தொகுப்பை வழங்கலாம்.

* 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும். 6 அடிக்கும் குறைவான கரும்பை மக்கள் கண்களின் படாமல் வேறு இடங்களில் வைக்க வேண்டும்.

* தரமான அரிசி, சர்க்கரையை வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்புக்காக அனுப்பிவைக்கப்பட்ட பச்சரிசியை தான் வழங்க வேண்டும். ஏற்கெனவே உள்ள பழைய அரிசியை வழங்கக் கூடாது.

* மாற்று தேதி டோக்கன் கொண்டவர்கள் வந்தாலும் அவர்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கலாம். இவ்வாறாக ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x