Published : 07 Jan 2023 06:02 AM
Last Updated : 07 Jan 2023 06:02 AM

செஞ்சிக் கோட்டையில் கோலோச்சிய ராஜா தேசிங்கு, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாரா? - விழுப்புரம் ஆட்சியருக்கு வரலாற்று ஆர்வலர் விளக்கம்

விழுப்புரம்: செஞ்சிக் கோட்டையின் மரபை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ‘செஞ்சிக் கோட்டையில் மரபு நடை விழா’ என்ற நிகழ்வு இன்று தொடங்கி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பான நிகழ்ச்சி குறித்த தகவலை அறிக்கை வடிவில் மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில், 'ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தொன்மையானவர்களில் ஒருவரான ராஜா தேசிங்கு' என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தவறான தகவல் என பல தரப்பினர் சுட்டிக்காட்டி வரும் சூழலில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு, விழுப்புரம் நடுநாட்டு பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான வரலாற்று மரபு நடை, வரலாற்று சிறப்பு வாய்ந்த செஞ்சிக் கோட்டையில் இன்று தொடங்க இருக்கும் சிறந்த முன்னெடுப்பிற்கு வாழ்த்துகள்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த ‘தென்னகத்தின் டிராய்', ‘எளிதில் வெல்ல முடியாத கோட்டை' எனும் புகழை பெற்றது செஞ்சிக் கோட்டை. ஒரு காலத்தில் தென்னகத்தின் அரசியல் செஞ்சியை மையப்படுத்தியே நடந்தது என்பதும் வரலாற்று உண்மை. சத்ரபதி சிவாஜியால் வெற்றி கொள்ளப்பட்டது. பல்வேறு போர்களையும் சந்தித்துள்ளது. ‘செஞ்சி அழிந்து சென்னப் பட்டணம் உருவானது' என்னும் சொலவடையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புகளை கொண்டு, விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் இலட்சினையாகத் திகழும் செஞ்சிக் கோட்டையில் இருந்து நமது மரபு நடை தொடங்கப்படுவது என்பது சிறப்பும், பொருத்தமும் ஆகும்.

தமிழ் எங்கே போனது?

இன்று தொடங்க இருக்கும், ‘செஞ்சிக் கோட்டையில் மரபு நடை விழா’ தொடர்பாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட காட்சிப்படுத்தல் சின்னம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என சொல்லிக் கொண்டே தமிழை பின்னுக்குத் தள்ளுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிகழ்வு தொடர்பாக தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் சில நெருடல் காணப்படுகிறது. ‘ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தொன்மையானவர்களில் ஒருவரான ராஜா தேசிங்கு' என குறிப்பிடுகிறது தங்களின் அறிக்கையின் தொடக்கம்.

ராஜா தேசிங்குக்கிற்கும் ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அவர் இறந்தது 1714. செஞ்சிக் கோட்டையில் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு வந்தது 1761-ல். அதாவது, தேசிங்கு இறந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு...

‘ராஜா தேசிங்கால் கட்டப்பட்ட செஞ்சிக் கோட்டை' என மேலும் குறிப்பிடுகிறது தங்கள் அறிக்கை. செஞ்சிக் கோட்டை 13-ம் நூற்றாண்டில், சோழர் காலத்தின் இறுதிப் பகுதியில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து விஜய நகரர், நாயக்கர் மற்றும் மராத்தியர் ஆட்சிகளில் செஞ்சிக் கோட்டை கட்டுமானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ராஜா தேசிங்கின் தந்தையான சாரூப் சிங் 1700 முதல் 1714 ஜனவரி வரையிலும் முகலாயப் பேரரசின் பிரதிநிதியாக செஞ்சியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். இவரது மறைவுக்குப் பின் செஞ்சி ஆட்சிப் பொறுப்பை தேசிங்கு ஏற்றார்.

மேற்காணும் தந்தை, மகனது ஆட்சிக் காலங்களில் செஞ்சிக் கோட்டையில் எவ்விதமான கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செஞ்சி கோட்டையை ராஜா தேசிங்கு கட்டினார் என்பதும் மாறுபட்ட தகவலாகும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x